Sunday, July 12, 2009
இடாகினிப் பேய்களளும் நடை பிணங்களும் உதிரி இடைத்தரகர்களூம்
ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது கிடைத்த அனுபவங்களை அங்கு சந்தித்த மனிதர்களையும் சற்று புணைவுடன் ஒரு நாவலாக்கியிருக்கிறார். ‘எதற்கும் இதை ஒரு புணைக்கதை என்றே எண்ணிக்கொள்’ என்று சொல்லும்போதே இது புணைக்கதை அல்ல என்பது தெளிவாகிறது. தனது பணிக்காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைக் கொண்டு வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டு பத்திரிக்கைகளில் வெளியான சிறுகதைகளை பின் இணைப்பாகக் கொடுத்திருக்கிறார்.
கதையின் சாராம்சம் இதுதான்;தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபர்களெல்லாம் தியாகிகள் அல்லர். அவர்களுக்கும் சாதாரணர்களைப் போன்ற ஆசா பாசாங்கள் உண்டு. அவர்களுக்குள்ளும் காதல்,பாசம், சண்டை, கர்வம் போன்ற
சராசரி உணர்வுகள் உண்டு. மேலும் அவர்களுள் பலர் தங்கள் பணிக்குத் தகுந்த பக்குவமற்றவர்கள், எளிதில் கோபம் அடைபவர்கள் மற்றும் பணித்திரனும் குறைந்தவர்கள். தொண்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நிர்வாகிகள் பலரும் ராஜபோகத்தை அனுபவிப்பவர்கள், a/c இல்லாத அறையில் உட்காரவோ , நெய் இடாத பண்டத்தை உண்ணவோ மாட்டார்கள். நாவல் செய்யும் மிகப்பெரிய கட்டுடைப்பு இதுதான்.
நாவலில் மிகப்பெரிய அழுத்தம் எதுவும் இல்லை. நிர்வாகிகள் தங்களுக்கென தனி கழிவறை கட்டிக்கொள்வது போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளே குறிப்பிடத்தக்கவை. கதையின் ஊடாக ஒரு காதல் கதை செல்கிறது. அதில் கொஞ்சம் சுவாரசியம் இருக்கிறது. மன வருத்தத்தில் இருக்கும் நாயகியின் அவயங்கள் சிலவற்றை வருடிக்கொடுக்கிறார் நாயகன். ‘it is very soothing,sir' என்கிறாள் நாயகி. அப்போது நாயகனுக்கு மர்ம உறுப்பில் குறுகுறுக்கிறது.
இதில் பாலியல் எண்ணம் எதுவும் இல்லையாம். இது நாயகன் தோழிக்கு செய்யும் உதவி மட்டும்தானாம்! இந்த அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு சார்! நக்கலடித்தாலும், அவர் என்ன சொல்லவருகிறார் என்று புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் அதை சரியாக present செய்யவில்லை.
ஆங்காங்கே அடைப்புக் குறிகளுக்குள் ‘தமிழ் வாசகா,வாசகி...’ என ஆரம்பித்து தன் எண்ணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். சில இடங்களில் நம்மிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். இது சலிப்பைத் தருகிறது. மேலும்
கதை ஓட்டத்தை பாதிக்கிறது. அதைப்போலவே இடையிடையே கதையில் வரும் சம்பங்கள் குறித்து தான் எழுதிய சிறுகதைகளையும் அது எந்த ஆண்டு எந்த பத்திரிக்கைகளில் வெளியானது என்ற செய்திகளும் தவிர்க்கப்பட்டு பின் இணைப்பில் மட்டும் கொடுக்கப்பட்டு இருக்காலாம். கட்டுரைகளில் reference கொடுப்பதைப்போல கதைகளில் கொடுக்கக்கூடாது என்ற பாடத்தை இது சொல்லித் தருகிறது.
பின் இணைப்புகளில் ‘அம்மன் விளையாட்டு’ என்ற சிறுகதை மட்டும் என்னைக் கவர்ந்தது. நையாண்டி மிக்ச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. மற்றும் சில அபத்தங்களும் போலித்தனங்களும் நன்றாக கட்டுடைக்கப் பட்டுள்ளன. ஒரு தலைக்காதலால் உருகும் ஒரு சக பணியாளரைப் பற்றிய கதை இது. நண்பர் தன் காதலை சொல்லும்போதே ‘கல்யாணம் வரைக்கும் என் சுண்டுவிரல் கூட உம்மேல படாது’ என்கிறார். இதைப்பற்றி வேறொரு இடத்தில் ஆசிரியர் குறிப்பிடும்போது ‘இந்த மனுசனுக்கு பாலியல் தாபம் ஒரு பக்கம் சுண்டுவிரல் இன்னொரு பக்கம்’ என்று சொல்கையில் சிரிக்காமல் இருக்க முடியாது.
வேறு,தெரிந்த, தேர்ந்தெடுத்து வைத்துள்ள புத்தகங்கள் எதுவும் இல்லாதபோது படிக்கலாம்!
தமிழினி பதிப்பகம்,2002, 128 பக்கங்கள், விலை: ரூ.40.
Monday, July 06, 2009
நான் featured இன்வெஸ்டர் ஆயிட்டேன்
நிற்க. குறுங்கடன், சோசியல் இன்வெஸ்ட்மெண்ட் போன்ற வார்த்தைகளை புரிந்துகொள்ள வேண்டுமானால் எனது முந்தைய பதிவான வாருங்கள் சமுதாயத்தில் முதலீடு செய்வோம் -ஐப் படிக்கவும்.
இதனால சகல மக்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் ரங் தே நிறுவனத்தினரின் என்னுடைய பங்களிப்பைப் பாராட்டி என்னை featured investor-ஆக அவர்களது தளத்தில் முதற்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நம்முடைய பெயர் அதுவும் புகைப்படத்துடன் மேலும் ஒரு நல்லவிசயத்தைப் பாராட்டி வெளியிடப்படும்போது மகிழ்ச்சிதானே!
சும்மா கிடைத்த விளம்பரத்தை வீண் செய்வானேன் என நண்பர்களுக்கு இச்செய்தியை தட்டிவிட்டேன். அது மேலும் மகிழ்ச்சிகளை கொண்டுவந்தது. எப்படி? நண்பர்கள் வெறும் பாராட்டோடு நிற்காமல் ஒரு சிலர் இன்று அதில் முதலீட்டாளர்களாகச் சேர்ந்து ஏழை மக்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்துள்ளனர். 'thanks for showing me a easy way to help others' என்று குணசேகரன் மெயில் அனுப்பியபோதும் ஏற்கனவே உறுப்பினராக உள்ள பாலு இன்று மேலும் சிலருக்கு உதவி செய்ததை அறிந்தபோதும் மிக்க மகிழ்ந்தேன்.
இன்றைய சிறப்பை நினைவில் கொள்வதற்காக நண்பன் முத்துக்குமார் வலைத்தளத்தின் முதற்பக்கத்தை படமாக அனுப்பியிருந்தான். ஆஹா... பாசக்காரப் பயலுவ!
அனைவருக்கும் முன்கூட்டியே நன்றி!
Wednesday, June 24, 2009
ஏண்டா மனுசா சூடு பார்ட்டி ஆயிட்டே?
கலை, இலக்கியம் என்பவை மனிதனை மேம்படுத்தும் கோனார் வழிகாட்டிகள்... எல்லாம், எல்லாம்...
என்ன பயனென்று தோன்றுகிறது. ஏதும் தோலின்கீழ் இறங்குவதில்லை சமீபகாலமாய். ஒன்று தோல் தடித்து விட்டது. அல்லது தோலைத் துளைக்கும் ஆற்றலை கடவுளர்களூம் அவர்தம் முகவர்களூம் இழந்துவிட்டனர். போதனைகள், தத்துவங்கள், தீர்க்கதரிசனங்கள், அருள்வாக்குகள் இழந்துவிட்டன். தாய் முலைப்பாலில் D.D.T. கலந்தது போல, முட்டையின் உயிர்க்கருவில் antibiotics கலந்தது போல, எல்லாவற்றிலும் சாக்கடை கலந்து நீர்த்து..
சிறுவருக்கான ஊடகச் சானல்களின் பாம்புகள் மூக்கின் வழியாக நச்சுப்புகை கக்குவதைப் போல, சாலைகளில், பொது இடங்களில், பணிப்புரைகளில், அலுவலகங்களில், பாடசாலைகளில், மருத்துவமனைகளில் மனிதர்கள் நச்சுப்புகை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கும் சாரமாய், பகையின் திரட்சியாய், நச்சின் தீண்டலாய்..
எந்த சாலை சிக்னலிலும் நீங்கள் கவனிக்க முடியும். ஒன்றேகால் இடைவெளி இருந்தால் அதில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று நுழைந்து முந்தி நிற்கும். கடுப்புடன் சில பார்வைப் பரிமாற்றங்கள். முன்பு நின்றவர் பெண்மணி என்றால் வந்து நின்றவர் பாவத்தில் ஒரு இளக்காரம், அலட்சியம்.
அரசு அலுவலகத்தில் அல்லது வங்கியில் தகவல் ஒன்று பெருவதற்காகச் செல்லுங்கள் - எதிர்கொள்வது மூலக்கடுப்பில் வலிக்கும் முகமாக இருக்கும். தடுப்புக்கு மறுபுறம் நிற்பவன் பகை நாட்டைச் சேர்ந்தவன் போல, தனது நிம்மதியை, சந்தோஷத்தை, சாவகாசத்தைக் கெடுக்க வந்தவன் போல, இடைஞ்சல் செய்ய வந்தவன்போல, நோய்க்கிருமி போல எண்ணிய பாவனையுடன் ஒரு கேள்வி பிடுங்கும் போலீஸ் தோரணயுடன். என்மேல் எதற்கு இந்த வன்மம், நான் இவர்களுக்கு என்னதீங்கு செய்தேன், என்று எழும் வினாக்களைத் தவிர்க்க இயலாது.
பல கான்வென்ட் பள்ளிகளில் சகோதரிகளும் தாய்களும் பெற்றோரை வரவேற்கும் பாணியே வன்முறையாக இருக்கிறது. சகல துன்பங்களுக்கும் இவர்களே காரணம், பொறுப்பு என்ற ரீதியில். மறு கன்னத்தையும் தாராளமாக நீங்கள் காட்டிவிட்டு வரலாம். தம்மிடம் பயிலும் மாணவ-மாணவிகளைக் கூட அவர்கள் தம்மைத் தோர்க்கடிக்க வந்த பாவிகள் அல்லது விரியன் பாம்புக்குட்டிகள் என எண்ணுவார்களோ என்னவோ?
அரசு ஊழியர், வங்கி ஊழியர், ரயில்வே ஊழியர், தபால்தந்தி ஊழியர், ஆசிரியர் என பல போராட்டங்களைப் பார்த்திருக்கிறோம்.எல்லா கோரிக்கைகளிலும் நியாயம் தென்படுவதில்லை. எவன் எப்படியும் நாசமாகப் போகட்டும், எனக்கென்ன கிடைக்கும் எனும் போக்கில் போகிறது விவகாரங்கள். பள்ளியில் அரைமதிப்பெண் போய்விட்டால், ஒரு கண்ணாடி தம்ளர் உடைந்துவிட்டால், ஒரு கப் பால் சிந்திவிட்டால் அரக்கி போல் பாய்ந்து பாய்ந்து குழந்தைகளைத் தள்ளூம் தாயார் நம்மிடம் ஏராளம். கோபத்தில் திட்ட அல்லது அடிக்க ஆரம்பித்த பிறகு, உள்மனம் அதையொரு கோரிக்கை போல உளவாங்கி அந்த வன்முறையைத் துய்க்க ஆரம்பித்துவிடுமோ எனத் தோன்றும் பலசமயம்.
இந்த வன்மம், காழ்ப்பு, கடுப்பு வெறுப்பு எங்கிருந்து முளைவிடுகிறது? சமூகவியலாளர்கள் ஆய்ந்து பார்க்க வேண்டும்.
சற்று யோசித்துப் பாருங்கள் - நகரப்பேருந்துக்கு கூட்டமாய்க் காத்து நிற்கும் நம் மன நிலையையும், பேருந்துக்குள் நுழைந்த பிறகு மறு நிறுத்ததில் காத்து நிற்கும் மனிதர் பற்றிய நம் மனநிலையையும். கூட்டமில்லாத பேருந்துகளில் சன்னலோர இருக்கையில், சர்வாங்க சவரத்துக்குத் தோதான பாவத்தில் கால்களை அகட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறவர், பக்கத்து இருக்கையில்
வந்து அமர்பவர் மீது கொள்ளும் உணர்வை என்னவென்று சொல்வது? கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் எனக்கு முன்பு ஏறியவர், தனது நண்பர்களுக்கு இடம்பிடிக்க, இரண்டு வரிசை இருக்கைகள் மீது பரவிக்கிடந்தார். பயணதூரம் நான்கு கிலோமீட்டர். முதியவர்கள், பெண்கள் கைக்குழந்தை சுமந்து நின்று பயணம் செய்தாலும் எவரும் எழுந்து இடம் கொடுப்பதில்லை. இதில் ஆண், பெண் பேதமில்லை. என்ன இழவுக்கு பேருந்தில் வந்து கழுத்தறுக்கிறார்கள் எனும் வெறுப்பை உடல்மொழி உமிழ உட்கார்ந்திருப்பார்க்ள். இரவில் பயணம் செய்ய்யும் சொகுசுப் பேருந்துகளில் கைவைக்கும் தாங்குகட்டையை ஆக்கிரமித்துக்கொள்ளத்தான் மனிதருள் எவ்வளவு நுட்பமான, வஞ்சனையான கத்தியும் ரத்தமும் இல்லாத யுத்தங்கள்?
நோய்க்கு பண்டுவம் பார்க்க மருத்துவரைக்காண காத்துக் கிடக்கும்,ரயில் பயண முன்பதிவுக்கு வரிசையில் நிற்கும், ரேஷன் கடை முன் காலி மண்ணெண்ணெய் டப்பவுடன் காத்துக் கிடக்கும், தண்ணீர் வராத வரிசை முன் குடம் வைத்திருக்கும், டெலிபோன் பில், மின்சார பில் கட்டக் காத்துக்கிடக்கும் மத்திய தர, உயர் மத்திய தர, மேல்மட்ட, அடிமட்ட மக்களுக்கு வரிசையில் முந்த எத்தனை தீவிரம்? இரண்டு, மூன்று பேரை முந்தியதில் மிச்சமாகும் சில் மணித்துளிகளை அவர்கள் எந்த வங்கியில் காப்பீடு செய்வார்கள்? வரிசயில் முந்தி காரியம் சாதித்தபின் அவர்கள்
முகத்தில் பிரகாசிக்கும் வக்கிரமான ஆனந்தத்தின் பொருளென்ன?
மறுகன்னத்தையும் காட்டுங்கள் ஐயா!
பகைவனுக்கும் அருளுங்கள் ஐயா!
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே!
பல சமயங்களில் எனக்குத் தோன்றும் - ஒருவரையொருவர் சபித்துக்கொண்டு, வெறுத்துக்கொண்டு, துன்பப்படுத்திக்கொண்டு, வஞ்சனை செய்துகொண்டு, சுரண்டிக்கொண்டு, ஏமாற்றிக்கொண்டு, வன்மம் பாராட்டிக்கொண்டு பழிவாங்கிக்கொண்டு வாழும் சமுதாயம்தானா நமது என.
வயது முதிர்ந்த, செயலற்றுக்கிடக்கும் தகப்பன் மீது காட்டும் வன்மங்களை, கிழட்டுத் தாயின் தலை முடியைப் பற்றி வளைத்து முதுகில் குத்தும் பெற்ற மகனை, பசியில் பெற்றோர் நாவூரிக் கிடக்க மனைவி மக்களுடன் சிறு தீனி தின்பவரை, ‘கிழடு சாகவும் மாட்டங்கு.. கட்டிலும் ஒழியவில்லை’ எனத் தன்னிரக்கம் கொள்வாரை எவ்வளவு பார்க்கிறோம்? ஏன் இந்த பாச வறட்சி?
பெருஞ்சித்திரனார், வறுமையில் கொடுமையால் பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தன் மனைவியின் பொல்லா வறுமுலையின் சுரப்பிகள் தூர்ந்து போனதாகப் பாடுவதைப் போல, எல்லா நம் உணர்வுச் சுரப்பிகளும் தூர்ந்து வருகின்றனவா?
எந்த சி்னிமாவையும் கவனியுங்கள். தொடக்கக்காட்சிகளில் எதிர் நாயகர்கள்,அவர்களது அடியாடள்,குடிபடைகள் முகங்களில் எவ்வளவு வன்மம்? அவர்கள் மனிதர்களே இல்லையோ எனும் பாங்கில்
எத்தனை வக்கிரம்? முதியோர்களிடம் பெண்களிடம் குழந்தைகளிடம் வக்கற்றவர்களிடம் எத்தனை வன்முறை? இந்தக் கற்பனை எங்கிருந்து வருகிறது? வாழ்க்கையில் இருந்துதான் தெரிந்தெடுக்கிறார்கள் எனில், வாழ்வில் இது எங்கிருந்து வருகிறது? அரசியல்வாதிகள், குற்றவாளிகள்,சமூகவிரோதிகள்,கள்ளச் சந்தைக்காரர்கள், கடத்தல்காரர்கள் இதன் நாற்றங்கால் எனில் அவர்களிடத்தில் இத்தனை வன்மம் ஏன் வருகிறது? இறுதிக் காட்சிகளில் கதை நாயகந்திருப்பித் தக்கும்தும் இந்த வன்மம் எதிர் நாயகன்களுக்குச் சற்றும் குறையாமல் இருப்பதன் நோக்கம் என்ன? தடிகொண்டு, இரும்புக்கம்பி கொண்டு, மண்வெட்டிகொண்டு, கொலைக்கருவிகள் கொண்டு அந்தத் தாக்குதல்களை எந்த மனிதனேனும் உண்மையில் வாங்கிக்கொண்டு உயிர் வாழ இயலுமா? இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது - இந்த எதிர் தாக்குதல்களை எத்தனை திருப்தியோடு, மகிழ்ச்சியோடு, மயிர்க்கூச்செறிவோடு,ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு பார்வையாளர்கள் பங்கேற்கிறார்கள்? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைக்கும் காட்சியை மேற்கத்திய பண்டைய காளைச் சண்டைக்கு, அடிமைச் சண்டைக்கு ஒப்பான கேளிக்கை உணர்வுடன் எங்ஙனம் ஆர்ப்பரித்து ரசிக்க முடிகிறது இன்றைய பண்பாட்டு வளர்ச்சி பெற்ற மனிதனால்?
சகமனிதனை அவன் தலித் என்னும் காரணத்தால், சாணக்கரைசல் குடிக்க,மலம் தின்ன வைக்க, மூத்திரம் குடிக்க வைக்க எவ்விதம் சாத்தியமாகிறது? எத்தனை வன்மம் உடல் பூராவும், மனம் பூராவும் செயல் பூராவும் இருக்க வேண்டும் அதைச் செய்ய,செய்யத் தூண்ட,செய்வதை ரசிக்க?
சாதாரண இன்றைய வன்மம் இருக்கட்டும், சமூக விடுதலை என்றும், கலை என்றும், இலக்கியம் என்றும் தனிமனிதப் பண்பாட்டு மேன்மை என்றும் அதைச் சாதிப்பதுதான் எமது நோக்கம் என்று, தரிசனம் என்றும் உள்ளொளி என்றும் சித்தாந்தம் என்றும் எழுதியும் பேசியும் வருகின்ற கலை இலக்கிய பண்பாட்டு உன்னதர்கள் தமக்குள் பாராட்டும் பழி, கல்லாலும் சொல்லாலும்
சூழ்ச்சிகளாலும் ஒருவரை மற்றவர் தாக்கிக் காயப்படுத்தும் வன்மம் எனக்குள் தீவிரமானதொரு கேள்வியை எழுப்புகிறது. நான் இத்தனை ஆண்டுகளாகப் பயின்ற, நம்பிய,போதித்தவை என்னையே மேம்படுத்தவில்லை எனில்,என்னையும் வன்மம் குழிக்குள் கொண்டு செலுத்துகிறது எனில், கலை இலக்கியம் பண்பாடு என நான் புலம்பித் திரிவதன் பொருள் என்ன?
நீங்கள் கேட்கலாம் உலகத்தில் இவையெல்லாம் புதிய சம்பவங்களா, செய்திகளா என. இல்லைதான். இது மனித வரலாற்றில் நூற்றாண்டுகளாய் நிகழ்ந்து வருவதுதான். கெய்ன்-ஓபல் காலந்தொட்டு, கற்காலம் உலோக காலம் கடந்து. என்றாலும் இதிலிருந்து எனக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லையெனில், விடுதலை கிடைப்பது இருக்கட்டும், மேலும் மேலும் என் நிலை மோசமாகி வருகிறது எனில், என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனக்குள்? இந்த மனித மன நெருக்கடிகளுக்கு அடிப்படையில் என்ன காரணம்?
ஏன் எமது மக்களனைவருமே பிரஷர் குக்கரினுள் வாழ்வது போன்றதொரு மன நிலையை எப்போதும் கொண்டிருக்கிறார்கள்? எதன் மீதான ஏமாற்றம், வெறுப்பு, கசப்பு, தோல்வி இந்த வன்மத்தை உருவாக்குகிறது? சகமனித சகிப்பு ஏன் காணாமற் போயிற்று? கிராமத்து மனிதனை விட, நகரத்து மனிதன் இந்தப் பொறிக்குள் விரைந்து சிக்கிக் கொண்டான் எனில் அவனது கல்வி,
உயர் பதவி, சம்பளம், வாழ்க்கை வசதிகள், அனுபவங்கள், துய்ப்புகள் அவனுக்கு எந்த விடுதலையையும் தேடித்தராததா?
நமது பண்பாட்டு அடையாளங்கள், மனித வாழ்வை மேம்படுத்துவதாகச் சொல்லும் முயற்சிகள், நமது கடவுள்கள், தேவதூதர்கள், ஆன்மீக வழிகாட்டிகள், நீதி போதனைகள், அறச்சார்புகள் எல்லாம்... எல்லாம் கை நழுவிப் போய்க்கொண்டு இருக்கின்றனவா?
- நாஞ்சில் நாடன்
நன்றி : ஆனந்தவிகடன்
1.6.2003 ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த கட்டுரை இது. என்னுடைய கல்லூரிக் காலத்திலும் அதைத்தொடர்ந்த சில வருடங்களிலும் எனக்குப்பிடித்த கட்டுரைகள், கவிதைகள்,சிறுகதைகளை சேகரித்து வைப்பது வழக்கம். அவற்றுள் ஒன்றுதான் இந்தக் கட்டுரை. இப்பொழுது கொஞ்சம் சுமாரகத் தோன்றினாலும் வெளிவந்த காலத்தில் சுரீர் என ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தியது.
தீரா நதியில் வந்து பின்னர் குமுதத்தில் மறுபதிப்பு செய்யப்பட்ட, கவிஞர் தாமரையின் நேர்காணலும், தொலைக்காட்சி பார்ப்பதால் சமூதாயத்தில் குறிப்பாக குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்
படுகிறார்கள் என மன நல மருத்துவர் ருத்ரன் எழுதிய கட்டுரையும் என் சேகரத்திலிருந்து காணாமல் போயிள்ளுன. அவையும் அழியா ஊடகத்தில் சேமிக்கப்பட வேண்டியவையே. உங்களிடம் இருந்தால் இணையத்தில் பதிவேற்றுமாறு வேண்டுகிறேன். அல்லது எனக்கு அனுப்பிவையுங்கள்.
| Reactions: |
Wednesday, June 10, 2009
சாக்லேட் சாப்பிட்டிராத சிறுவன் - ஒரு பக்கக்கதை
பகுதி 1.
குமாருக்கு 15 வயதாகிறது. இன்னும் அவன் சாக்லேட் சாப்பிட்டதில்லை!
‘சாக்லேட்’ என்ற வார்த்தையையே அவன் 5 வயது முடிந்து 6-ஆம் வயதில் நகராட்சி ஆரம்ப பள்ளியில் சேர்ந்த பின்தான் முதலில் கேள்விப்பட்டான். அது ஒரு தின்பண்டம் என அவன் புரிந்துகொண்டது எப்போது என அவனுக்கு
நினைவில்லை. அவன் பெற்றோருக்கு ஏனோ அவனுக்கு சாக்லேட் வாங்கித்தர வேண்டும் என்று தோன்றவே இல்லை. பள்ளிக்கூடத்தில் சக குழந்தைகள் சாக்லேட் பற்றி ‘அப்படி இருக்கும்,இப்படி இருக்கும்’ என
பேசும்போதும் ‘மாமா துபாய்லர்ந்து சாக்லேட் வாங்கிட்டு வந்தாங்க’, ‘சித்தப்பா சிங்கப்பூர் சாக்லேட் வாங்கித் தந்தாரு’ என பேசும் போதும் அதில் அப்படி என்னதான் இருக்கிறது என ஆச்சர்யமாக கேட்டுக்கொள்வான்.
குமாருக்கு 9 வயதானபோது அவன் வீட்டுக்கு டீ.வி. வந்தது. அப்பொழுதுதான் அவன் ’சாக்லேட்’ என்ற பொருளை கண்களால் பார்த்தான்,விளம்பரங்களில்! அதன்பின் சாக்லேட் பற்றிய அவன் அறிவு அதிகமானது. வெளிர் மஞ்சள்,பால் வெள்ளை,அடர் கருமை, ஏன் நீல நிறத்தில் கூட அவன் சாக்லேட்டுகளைப் பார்த்தான். வெவ்வேறு சாக்லேட் பிராண்டுகளையும் அவன் அறிவான். இப்பொழுதெல்லாம் யாராவது சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்தால்
அவர்கள் சாக்லேட்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என குமாரால் உறுதியாகச் சொல்லமுடியும். ஆனால் சாக்லேட் எப்படி இருக்கும் என யாராவது கேட்டுவிட்டால்? இந்த சிந்தனையே அவனை அலைக்கழித்தது.
ஒரு முறை அவன் சித்தப்பா வீட்டுக்கு போயிருந்தான். அப்பொழுது சித்தப்பாவின் மகனுக்கு அவனது தாய்மாமா(சித்தியின் அண்ணன்) ஒரு சாக்லேட்டைக் கொடுத்தார். அதற்கு முன் ‘ஆசை’ போன்ற வண்ண
மழைக்காகிதத்தில் சுருட்டி விற்கப்படும் சிறிய சாக்லேட்டுகளை மட்டுமே நேரில் பார்த்திருந்த குமார், அப்பொழுதுதான் முதன் முறையாக ‘கேட்பரீஸ்’ போன்ற பெரிய சாக்லேட்டைப் பார்த்தான். தன் சிறு வயதில் ஏன் தனக்கு யாரும் இப்படி வாங்கித்தரவில்லை? என அவனுக்குள் கேள்வி எழுந்தபோது ஏற்பட்ட சுய-பச்சாதாபத்தால் கண்களில் நீர் கட்டியது.
அவனுடைய 14-ஆவது வயதில் சாக்லேட்டுகளின் வெவ்வேறு வண்ணங்கள் மட்டுமின்றி, உருண்டையாக, தட்டையாக , விரல் வடிவமுடைய , முட்டை வடிவமுடைய சாக்லேட்டுகளை அவற்றின் வடிவங்களுக்காகவும் ரசிக்கத்
தொடங்கினான்.
15-வது வயதில் நூலகத்தில் சாக்லேட்கள் பற்றி புத்தகங்களில் படித்து நிறைய தெரிந்து கொண்டான். அதனால் என்ன பயன்? இப்போது பெரியவனாகிவிட்டான். போதுமான அளவு பாக்கெட் மனி கிடைக்கிறது. அவன் நினைத்தால் பல வித சாக்லேட்களையும் ருசித்துப் பார்க்க முடியும். இன்னும் சில மாதங்கள் போனால் முயற்சிக்காமலேயே ‘சீச்சீ இந்த பழம் புளிக்கும்’ என்ற நிலைக்கு வந்துவிடுவோமோ? என்று கூட அவனுக்கு தோன்றியது. இருப்பினும் பெற்றோர் வாங்கிக் கொடுத்தால்தான் முதல் முறையாக சாப்பிடுவேன் என ஏனோ வஞ்சினம் கொண்டிருந்தான். ஆனால் சக
மாணவர்களோ தங்களுக்கென ஒரு பிரத்யேக சாக்லேட்டை உரிமை கொண்டாடும் நிலைக்கு வளர்ந்துவிட்டிருந்தனர். அவர்களும் அவர்களுடைய பிரத்யேக பிராண்டு சாக்லேட்டும் எப்போதும் இணைபிரியாமல் இருப்பதாக குமாருக்கு தோன்றியது.
குமாருக்கு 15 வயதாகிறது. இன்னும் அவன் சாக்லேட் சாப்பிட்டதில்லை! உங்களுக்கு குமாரை நினைத்தால் பாவமாக இல்லையா? இனிமேல் அவன் சாக்லேட் சாப்பிட்டால் என்ன சாப்பிடாவிட்டால்தான் என்ன? 5 வயதில்
அவனுக்கு அது கொடுத்திருக்கக் கூடிய எக்ஸைட்மெண்ட் இனி கிடைக்குமா?
----------------------------------------------------------------
பகுதி 2
குமாருக்கு இப்பொழுது 30 வயதாகிறது. பெண் சுகம் இன்னதென்று அவன் இன்னும் அறிந்திலன்!
பின்குறிப்பு: பகுதி 1-ல் வயதுகளுடன் 10க்கூட்டி மீண்டும் வாசிக்கவும் !
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
Sunday, June 07, 2009
’பூ’- எல்லாம் ஒரு திரைப்படமா?
சரி, நீங்கள் மிகுதியாக என்னை சாடுவதற்கு முன் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். ‘தவமாய் தவமிருந்து-திரையில் ஒரு நாவல்’என்பது போல ‘பூ - திரையில் ஒரு காவியம்’ என்பதுதான் நான் வைக்க நினைத்த தலைப்பு.
’பூ’ படம் பார்த்து சில மாதங்கள் ஆகிவிட்டன. அதை விமர்சித்து பதிவெழுத எனக்குத் தோன்றவில்லை. நண்பர்கள் சிலர் எழுதச்சொல்லிக் கேட்டபோதும் மறுத்தேன். ஏனெனில் ‘பூ’வை மற்ற திரைப்படங்கள் போல விமர்சித்துவிட முடியாது. அப்படத்தின் கணத்திற்கு அதைப்பற்றி திறனாய்வு செய்வதே பொறுத்தமாக இருக்கும். அதற்கு எத்தகைய உழைப்பு தேவை என்பதையும் அதை என்னால் கொடுக்க முடியாது என்றும் எனக்குத் தெரியும். மேலும் அதற்கான ‘target audience' யார்? சிற்றிலக்கியப் பத்திரிக்கைகள் வேண்டுமானால் அத்தகைய கட்டுரைகளை வெளியிடலாம். நான் அத்தகைய பத்திரிக்கைகளில் வெளிவருமாறு தரமான எழுத்தைத்தருவேனா? அப்படியே தரமாக இருந்தாலும் சிற்றிலக்கியப் பத்திரிக்கைகளின் அரசியலையும் தாண்டி வெளிவருமா? போன்ற பல கேள்விகள். அதையும் தாண்டி விமர்சனம் எழுத நினைத்தாலும் குறைந்த பட்சம் ச.தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதைத் தொகுப்பை படித்துவிட்டு சிறுகதையிலிருந்து ஒரு திரைப்படமாக அது எப்படி இயக்குநரால் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் பதிவு செய்தாக வேண்டும் என்ற ஒரு சுய நிர்ணயமும் செய்துகொண்டேன். இன்னும் படிக்கவில்லை. பிறகு ஏன் எழுதவந்தாய்? தொடர்ந்து இரண்டு பதிவுகளில் மசாலா சினிமாக்களைக் காய்ச்சியதால் நல்ல சினிமாவைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஷண்முகப்ரியன் போன்றவர்கள் பின்னூட்டமிடாததால் கோபித்துக்கொண்டார்களோ என்று ஒரு சந்தேகம். நான் ஒன்றும் சினிமாவுக்கே எதிரி அல்ல என்பதைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம்!
ஏற்கனவே பலரும் விமர்சித்திருப்பார்கள். திரைப்பட விழாக்களில் கூட பங்கு பெற்றது. எனவே சுருக்கமாக சில ‘highlight'-கள் மட்டும்.
* கதையை பொதுமைப்படுத்த வேண்டுமென்றால் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ போன்ற காதல் தியாகம்தான் கதை. ஆனால் அதை, கிராமத்து ஏழ்மை மற்றும் கள்ளமில்லா உள்ளம்(innoscense-ஐ வேறு எப்படிச் சொல்வது?), பட்டாசுத் தொழிற்சாலை தொழிலாளர்களில் வாழ்க்கை, வாழ்க்கை முழுவதும் உழைத்தும் சமுதாயத்தின் மதிப்பை பெறமுடியாத ஒரு தந்தையின் வெக்கை, engineer-களே ஆனாலும் அவர்களுக்குள் இருக்கு சம்பள வேறுபாடு போன்ற சமகால பிரச்சனைகளையும் சேர்த்து சொல்லியுள்ள விதம் மிகவும் அருமை. பெண்ணின் காதல் தியாகம் என்பதும் புதுமையானதே!
* கதாநாயகியாக நடித்துள்ள பார்வதியின் நடிப்பு அருமை என்றால் அதையும் தாண்டி வியக்கவைப்பது, நகரத்திலேயே படித்து வளர்ந்து, M.A.ஆங்கில
இலக்கியம் படித்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசி, Fashion show-க்களில் பூனை நடை பழகும் ஒரு பெண்ணை இப்படி ஒரு கிராமத்துப் பெண்ணாக இயக்குநர் எப்படி நடிக்கவைத்தார் என்பதுதான்.
* ‘நம்மள மாதிரி வேட்டாபீஸில (வேட்டு office.i.e.பட்டாசு தொழிற்சாலை) வேலை செய்யுற பொண்ணுங்க விஜய்,அஜீத்னு வேனா கனா கானலாம். இன்ஜியனுருக்கு படிக்கிற பையனையெல்லாம் லவ் பண்ணக் கூடாது’ என நாயகியின் தோழி கூறுவது, ‘ நான் எதிர்பார்க்கறது என்னை இப்ப இருக்கற நிலைமைல இருந்து அடுத்த லெவெல்கு எடுத்துட்டுப் போக ஸப்ப்போர்டா இருக்கற கொஞ்சம் கம்பியூட்டரெல்லாம் ஆபெரேட் பண்ணத் தெரிஞ்ச ஏவரேஜ் கேர்ள்’ என நாயகன் சொல்வது என அங்கங்கே யதார்த்த தத்துவம் பேசும் வசனங்கள் அருமை.
* நம் மக்களுக்கு எப்போதுமே climax-இல் நாடக உச்சம் இருக்கவேண்டும். பகவத்கீதை மக்கள் மனதில் பதிந்து இன்னும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு பேசப்பட்டு வருவதற்கு காரணம் அது உபதேசிக்கப் பட்ட இடம் நாடக உச்சமாக இருப்பதே காரணம் என ஜெயமோகன் சொல்வதை எண்ணிப்பாருங்கள். climax-இல் நாடக உச்சம் இல்லையெனில் படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஒரு சராசரி பார்வையாளனுக்கு அதை ஓர் நல்ல படம் என்று சொல்ல ஒவ்வாது. அக்குறை இப்படத்தில் இல்லை. இறுதிக்காட்சியில் தான் பால்ய பருவத்திலிருந்து விரும்பிய நாயகன் தன்
தியாகத்துக்குப் பிறகும் சந்தோசமாக இல்லை என்று தெரிந்துகொண்டு ஆழ்ந்த துயரை அடைந்த நாயகி, அதற்கு காரணமான தன் வாழ்க்கையில்
ஏமாற்றமடைந்த நாயகனின் மனைவி, இந்த விசயம் நாயகிக்கு தெரிந்துவிட்டதே என வருத்ததில் இருக்கும் நாயகன் மற்றும் இம்மொத்தச் சிக்கலுக்கும் காரணமான நாயகனின் தந்தை ஆகிய நால்வரையும் ஒரே frame-இல் காட்டிய உத்தி அற்புதம். அங்கே உலகத்தரம் மின்னுகிறது.
* பார்வதி மட்டுமல்ல;பார்வதியின் தாயாக, தாய்மாமாவாக, பள்ளி ஆசிரியராக, பட்டாசுத் தொழிற்சாலை மேலாளராக, நாயகியின் தோழியாக என எல்லா புதுமுகங்களும் யதார்த்தமாகவும் உருக்கும்படியாகவும் நடித்துள்ளார்கள்.
* அறிமுக இசையமைப்பாளர் எம்.எஸ்.குமரன் பிரமிக்கவைக்கிறார். சின்மயி குரலில் ‘ஆவாரம்பூ’, படம் பார்க்கும்போதே நெஞ்சுக்குள் புகுந்துகொள்ளும் வகை. சித்ரா, ஸ்வர்னலாதா, சுஜாதாபோல தனித்த அடையாளத்துடன் பாடலைக் கேட்டவுடனே பாடகரை அடையாளம் கண்டுகொள்ளுமளவிற்கு குரல் வளமும் திறமையும் கொண்டுள்ளார் சின்மயி எனபது என் கருத்து.
* குறை என்று சொல்லவேண்டுமானால் நகைச்சுவைக்காக திணிக்கப்பட்டுள்ள காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை. இத்தகைய இயக்குநருக்கும் நகைச்சுவை காட்சி அமைப்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது புரிகிறது. அல்லது அக்காட்சிகளில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம்.
நல்லதொரு திரைப்படத்தை கொடுத்த பூ-சசிக்கு நன்றி!
Thursday, May 21, 2009
சினிமாவால் சமுதாயம் பாதிக்கபடுமா? கலாச்சாரம் சீரழியுமா?
"நீங்கள் எந்தப் பண்புகளை போற்றுகிறீர்களோ அவை படிப்படியாக உங்கள் குண நலன்களின் பகுதியாகவே ஆகிவிடுகின்றன”
- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி., மக்கள் சக்தி இயக்கம்
இது ஒருவகையில் என்னுடைய முந்தைய பதிவான ஒரு காட்சிச்சூழலும் மூன்று திரைக்கதைகளும் பதிவின் தொடர்ச்சி.
ஒரு உணவகத்துக்கு செல்கிறீர்கள். அங்கே பார்ப்பதற்கு புதுமையாக பல வண்ணங்கள் கொண்ட ஒரு பதார்த்தம் இருக்கிறது. அதிலிருந்து வரும் மணமோ நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது. உங்களுக்கு முன் அப்பதார்தத்தை உண்டவர்களும் ருசியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவ்வுணவில் slow poison கலந்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வுணவை உண்பீர்களா?
நாம் சாப்பிடும் உணவு அதில் கலந்திருக்கும் பொருட்களுக்கு ஏற்ப எப்படி உடலுக்கு நன்மையையோ தீமையையோ செய்கிறதோ அது போலத்தான் நாம் பார்ப்பனவும் கேட்பனவும் படிப்பனவும் நம் மனதிற்கு உணவாகின்றன. மனம் அதன் போக்கில் இவ்வுணவுகளை செரித்து மூளையின் வெவ்வேறு பகுதிகளில் செய்திகளை சேகரித்து வைக்கின்றன. பின்னர் அவை உங்கள் குணத்தின் பகுதிகளாக மாறுகின்றன. இதில் உங்களுக்கு ஏதும் மறுப்பு இருக்கிறதா? இப்படி நம்மை அறியாமலேயே நாம் பார்க்கும் திரைப்படங்களும் நமக்கு உணவாகின்றன. அதுவும் இன்றைக்கு அவை 24 மணிநேரமும் நம்மேல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும்போது நாம் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
ஒரு நீலப்படத்திற்கு உங்கள் குழந்தையை அழைத்துச் செல்வீர்களா? ஏன், பாலுறவு இயற்கையின் ஒரு பகுதிதானே? குழந்தையை அழைத்துச் சென்றால் என்ன? ஆனால் கூட்டிச்செல்ல மாட்டீர்கள். ஏனெனில் அது குழந்தையை பாதிக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அது போல வணிகப் படங்கள் என்ற பெயரில் வரும் சில குப்பைகள் (எல்லா வணிக்கப் படங்களும் குப்பைகளல்ல!) உங்களையும் சிறிதளவேனும் பாதிக்கும் என்ற விழிப்புணர்ச்சி இல்லை.
ஒரு திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும் என சான்றளிக்கப்படுகிறது. ஆனால் அத்திரைப்படத்திலிருந்து பாடல்களை தொலைக்காட்சியில் ஒளி-ஒலி-பரப்ப எந்தத் தடையும் இல்லை. ஓளிபரப்பும் பணத்திருடர்களுக்கு எந்தப் பொறுப்பும் இருக்காது. ஆனால் பெற்றோருக்கு இது குறித்து ஏதேனும் அக்கறையோ விழிப்புணர்வோ இருக்கிறதா? மேற்சொன்ன உதாரணங்களைப் போன்றதுதான் திரைப்படங்களில் நாயகனின் குணம், பண்பு ஆகியன எப்படி சித்தரிக்கப்படுகின்றன என்பதும். அதைத்தான் முந்தைய பதிவில் விளக்க முனைந்தேன்.
விட்ட இடத்திலிருந்து தொடருவோம். முந்தைய பதிவில் எடுத்துக் கொண்ட காட்சிச்சூழல் ‘7G ரெயின்போ காலனி’ படத்திலும் வருகிறது.காதலியால் காதலனைக் கைப்பிடிக்க முடியவில்லை. எனவே இவ்வளவு நாள் காதலனாக இருந்தவனுக்கு பிரிவுப் பரிசாக தன்னையே கொடுக்க முடிவெடுக்கிறாள். வெளியே சென்று ஒரு நாள் தங்குகிறார்கள். எல்லாம் முடிகிறது. அடுத்த நாள் ஒரு விபத்தில் நாயகி இறந்துபோகிறாள். பெண்ணின் பெற்றோரும் உறவினரும் வந்து நாயகன்தான் அவளைக் கடத்திவந்திருக்க வேண்டும் என்று அவனை பழித்துத் தூற்றுகின்றனர். நாயகியின் பெயரை கெடுக்கவிரும்பாத நாயகன் அமைதிகாத்து அவப்பெயரை தாங்கிக்கொள்கிறான். இதற்காக செல்வராகவனை பாராட்டலாம். இறுதிக்காட்சியில் மட்டும் இந்த நல்ல ‘attitude' கொண்ட இப்படத்தில் அமைந்த மோசமான ‘attitude'-கள் என்னென்ன? மாபெரும் வெற்றிப்படமான இதை விமர்சிக்கும் முன்னர் ஓர் உண்மைச் சம்பவத்தை சொல்கிறேன், கேளுங்கள்!
ஆந்திராவில் நடந்த உண்மைச் சம்பவம். தினசரிகளில் படித்திருப்பீர்கள். ஓர் இளைஞன் ஒரு கல்லூரி மாணவியிடம் தன் காதலை(?) தெரிவிக்கிறான். தனக்கு விருப்பமில்லையென அமைதியாக மறுக்கிறாள். தொடர்ந்து வற்புறுத்துகிறான். அப்பெண் ஒப்புக்கொள்ளவில்லை. அவனுக்கு கோபம் வருகிறது. ஈருருளி (அதாங்க டூ வீலராமா!)-இல் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறாள் அம்மாணவி. அவளின் தோழி வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறாள். கூட்டாளியோடு குறுக்கே வந்து வழிமறிக்கிறான் அக்காதலன். அம்மாணவிகளின் மீது அமிலத்தை ஊற்றி தன் கோபத்தை தனித்துக்கொள்கிறான். காதலிக்கப்பட்ட அந்த மாணவி இறந்துபோகிறாள். வாகனம் ஓட்டி வந்த தோழி helmet அணிந்திருந்ததினால் காயங்களோடு தப்பிக்கிறாள். அமிலம் வீசிய கையோடு தலைமறைவாகிறார்கள் அவ்விளைஞர்கள். ஆந்திராவில் பரபரப்பு செய்தியாகிறது. குற்றவாளிகளை கண்டடுபிடித்து தண்டிக்குமாறு பொதுமக்கள் வீதிக்கு வந்து தர்ணா செய்கிறார்கள். காவல்துறைக்கு அழுத்தம் அதிகமாகிறது. அவர்களைத் தேடிச்செல்கிறது. தாங்கள் பதுங்கி இருக்கும் இடத்தை காவலர்கள் நெருங்கியதும் பயத்தில் செய்வதறியாது ஆயுதங்களால் காவலர்களை தாக்குகின்றனர். காவலர்கள் வேறு வழியின்றி அவர்களை சுட்டுக் கொள்கின்றனர்.
இச்சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது? மூன்று உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளன ஒரு அற்பமான ஒருதலைக் காதலுக்காக. அவ்விளைஞனை அப்படி செயல்படத் தூண்டியது யார்? தன் காதலை சொன்னால் அப்பெண் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என அவனை எது எண்ணவைத்தது? உங்களிடம் ஏதேனும் பதில் இருக்கிறதா?
‘7G ரெயின்போ காலனி’-க்கு திரும்ப வருவோம். எந்தத் திறமைகளும் இல்லாத, சுமாராகக்கூட படிப்பு வராத, பெற்றோர்களால் உதவாக்கரை என்றும் நண்பர்களால் ‘சப்பை’ என்றும் வருணிக்கப்படுகிற ஒருவந்தான் நாயகன். இங்கே ‘நாயகன்’ என்ற சொல்லை பயன்படுத்தியதற்காக என்னை மன்னிக்கவேண்டும். கதைகளில் மையமான பாத்திரத்தை ஆண் என்றால் நாயகன்,கதாநாயகன்,ஹீரோ என்றும் பெண் என்றால் நாயகி, கதாநாயகி, ஹீரோயின் என்றும் விளிப்பதே வழக்கத்தில் உள்ளது. ஆனந்த விகடனில் இதற்கு முன்னர் வந்த ’நாயகன்’ தொடரில் சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு வெளிவந்தது. இப்போது அன்னை தெரசா. இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். எனவே நாம் புரிதலுக்காக உதவாக்கரை நாயகன் என்று oxymoran-இல் விளிப்போம். அந்த உதவாக்கரை நாயகன் அப்படி இருப்பதில் ஏதும் தவறில்லை. எல்லோரும் திறமைசாலிகளாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவனை மையப் பாத்திரமாக வைத்து படம் எடுப்பதும் தவறில்லை. அதுதானே யதார்த்த சினிமா? ஆனால் வில்லங்கம் அவனுடைய காதலினால் வருகிறது. விருமாண்டியில் கமலின் பாட்டி ஒருவனைத் திட்டிய ‘அஞ்சு அழகுல ஒரு அழகும் இல்லாத கருவாப்பய’ என்ற புகழுரை சரியாகப் பொருந்தக்கூடிய இந்த உதவாக்கரை நாயகன் ஒரு வாழ்ந்து கெட்ட சேட்டு வீட்டுப் பெண்ணை, அழகும் அறிவும் கூடிய பெண்ணை காதலிக்கிறானாம்! தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் அப்பெண்ணும் இவனை காதலிக்கத் தொடங்கிவிடுகிறாளாம்!
இதுபோன்ற படங்களினால்தான் அந்த ஆந்திரா இளைஞன் தொடர்ந்து முயற்சித்துள்ளான் என்றும் அந்த நாயகி பின்னர் ஏற்றுக் கொண்டாலே இவள் ஏன் ஏற்க மறுக்கிறாள்? என்று ஆத்திரம் அடைந்ததாலும்தான் அமிலம் வீசும் முடிவுக்கு வந்தான் என்றும் நான் யூகிக்கிறேன். ஏதோ என் கருத்தை நிறுவுவதற்காக சம்பந்தமில்லாமல் இவ்விரண்டையும் நான் தொடர்புபடுத்தியதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதை நீங்கள் மறுக்க முடியுமா? உண்மையில் அவ்விளைஞனுக்கே தான் எதனால் அப்படி செய்தோம் என்று தெளிவாக தெரியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் நான் முன்பு கூறியதைப்போல பார்த்ததும் கேட்டதும் படித்ததும் நாம் போற்றியதும் ரசித்ததும் புகழ்ந்ததும் ஆழ்மனதில் பதிந்து நம்மை அறியாமலேயே நமது குணங்களாகின்றன!
உதவாக்கரை இளைஞர்கள் மேலும் எப்படி உருப்படாமல் போகலாம் என வழிகாட்டிய செல்வராகவன் அடுத்து நமது பெண்களுக்கு அளிக்கும் உபதேசம் என்னவென்று பார்க்கலாம். காதலனை கைப்பிடிக்க முடியாத சூழ்நிலை வந்தால் தான் கொண்டிருந்த காதல் உண்மைதான் என அப்பெண் எப்படி நிரூபணம் செய்வது? அதற்கு அப்பெண் தன் கற்பை தர வேண்டும் என்கிறார் செல்வா. அப்பொழுதுதான் அது sincere love!. குஷ்பூவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் எவரும் ஏன் இப்படி படைப்புகளின் மூலம் கலாச்சாரத்தை சுரண்டுபவர்களுக்கு எதிராக போராடவில்லை என்பது ஆண்டவனுக்கே அல்லது இயற்கைக்கே வெளிச்சம்!
த்ரிஷாவை வில்லன் துரத்துகிறான். அவனிடமிருந்து காப்பாற்ற விஜய் த்ரிஷாவை அழைத்துக் கொண்டுபோய் கலங்கரைவிளக்கு கட்டிடத்தின் மேல் தளத்தில் இரவில் தங்கவைக்கிறார். அப்போது அவருக்கு குளிர்கிறதாம். எந்த அனுமதியுமின்றி த்ரிஷாவின் துப்பட்டாவை எடுத்து போர்த்திக்கொண்டு ஒரு ‘தம்’மையும் பற்றவைத்துக் கொள்கிறார். இத்தனைக்கும் அவர்கள் இன்னும் காதலர்களாகக் கூட ஆகியிருக்கவில்லை (அப்படிதான் அந்தக்காட்சியை வைத்து யூகிக்கிறேன். படம் பார்த்ததில்லை).என்ன ஒரு பெட்டைத்தனமான செயல்? ’எருமை மாடுமாதிரி இருக்கும் உனக்கே குளிரினால் அந்தப் பெண்ணுக்கு குளிராதா?’ என்றுதான் எனக்கு கேட்கத் தோன்றுகிறது. இந்தக் காட்சியை ரசித்துவிட்டு அந்தப் படத்தை வெற்றிப்படமாக்கிவிட்டு பின்னர் இளைஞர்களுக்கு, மேலை நாட்டு புத்தகங்களை இறக்குமதி செய்து நடத்தையியல் போதிக்கிறோம். என்னவென்று? பேருந்தில் பெண்களுக்கு இடமில்லையெனில் ஆண்கள் எழுந்து இடம் கொடுக்கவேண்டுமென்று! இந்த முரண்பாட்டில் அவன் எதை கடைபிடிப்பான்? துப்பட்டாவைதான் பிடித்து இழுப்பான். அப்போதுதானே அவன் நண்பர்களிடத்தில் ‘விஜய் மாதிரி தைரியமா இழுத்தான் பாரு’ என்று ஹீரோவாக முடியும்?
இத்தனை பெரிய பதிவில் என் கருத்துகளை பதியக் காரணம் இப்படி படம் எடுப்பவர்களையோ அல்லது அக்கதா பாத்திரங்களைப் போல் வாழும் அடித்தட்டு மக்களையோ திருத்துவது அல்ல. அது முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். என்னுடைய ஆதங்கமெல்லாம், புரியாத புதிராக இருப்பதெல்லாம் நடுத்தரவர்கத்தை சார்ந்த, நல்ல குணங்களும் சிறப்பியல்புகளும் கொண்ட, மேலான கல்வி கற்ற, அதிகம் சம்பாதிக்கிற என்னை விட பல விதங்களிலிலும் சிறந்த attitude கொண்டிருக்கிற நண்பர்கள் இத்தகைய படங்களை ரசிப்பதும் பொழுதுபோக்கு விசயங்களில் மட்டும் தாழ்ந்து விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்களாக இருப்பதும் இந்த நடிகர்களின் ‘survival'-க்கு துணைபோபவதும்தான். இவர்கள் ஒருபோதும் அக்கதாநாயகர்களைப் போல் தரம் குறைவாக நடக்காதவர்கள். இவர்கள் ஒருபோதும் கட்டவுட்டின் மேலேறி ’பியர்’ அபிஷேகம் செய்ய விழையாதவர்கள். இருப்பினும் ஒரு வசதியான நிலையில் இருப்பதால் வெறும் பொழுதுபோக்காக மட்டும் அவர்களால் ரசிக்க முடிகிறது. அப்படியானால் அவர்களுக்கு சமுதாய நோக்கு இல்லாததுதான் காரணமா? ’பியர்’ அபிஷேகம் செய்யும் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவதைப் பற்றியும் அதனால் நாமும் மறைமுகமாக பாதிக்கப்படுவதையும் பற்றி எந்த அக்கறையும் வருத்தமும் கிடையாதா? சமுதாயத்திற்கு ஒரு தீங்கு என்றால் அதனால் நமக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு இல்லையென்றாலும் கூட நாம் மறுக்கவேண்டும் இல்லையா? மறைமுகமாக நமக்கும் அது பிரச்சனைதான் இல்லையா? சமூக நோக்கு இல்லாமைதான் இத்தகைய ஊக்குவிப்புகளுக்கு காரணம் என்று கூட ஒரே அடியாக என்னால் சொல்லமுடியவில்லை. அது ஒரு 50% தாம் தான். அந்த ரசனைகள் சமூகத்தில் சிலரை வழிதவறச் செய்யும் என்ற விழிப்புணர்வு இல்லாததுதான் மீதமுள்ள 50 சதவிகிதத்தினருக்கான காரணமாக இருக்க முடியும் என்று கருதுகிறேன். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த என்னாலான சிறு முயற்சி.
விவாதங்களுக்கு தயாராக இருக்கிறேன்!
Wednesday, May 13, 2009
ஒரு காட்சிச்சூழல் - மூன்று திரைக்கதைகள்
திரைக்கதை 1: செவிலி, மருத்துவமனையின் அந்த அறையிலிருந்து வெளிப்படுகிறாள். அப்பெண்ணின் பெயரைச் சொல்லி அவளது பிணத்தை பார்க்கவேண்டியிருப்பவர்கள் வரலாம் என்கிறாள். அந்த நேரத்தில் அப்பெண்ணின் தந்தையும் அங்கு
காத்திருப்பதை ஹீரோ கவனிக்கிறான். அப்பெண்ணின் அப்பாவுக்கு முன் தான் முந்திக்கொண்டு போய் தன் காதலியின் பிணத்தின் மீது விழுந்து அழுது புலம்புகிறான். பின்னாலேயே உள்ளே வரும் அப்பெண்ணின் தந்தை இக்காட்சியை பார்த்து
கண்ணீரும் திகைப்புமாக நிற்கிறார். அவரைப் பார்த்து ஹீரோ, நீலுவ எனக்கு எவ்ளோ புடிக்கும் தெரியுமா சார்? நீலுக்கு என்னை எவ்ளோ புடிக்கும் தெரியுமா சார்? நீங்களே நீலுகிட்ட கேட்டுப்பாருங்க சார்! நீலு சொல்லு நீலு. உங்கப்பாகிட்ட
சொல்லு நீலு! இப்படி என்ன தனியா விட்டுட்டு போயிட்டியேஏஏஏஏஏஏ!
திரைக்கதை 2: செவிலி வந்து அறிவிப்பு கொடுத்தவுடன் அவ்வறைக்குள் நுழைய முற்படுகிறார் அப்பெண்ணின் தந்தை. ஓடிச்சென்று அவரை மறிக்கிறான், ஹீரோ. யோவ் நில்லுய்யா! எங்கய்யா போற? நீயே கொலை பண்ணிட்டு இப்போ அழுகுறயா? என்று கோபமும் கண்ணீருமாக கேட்கிறான்.. திகைத்து நின்று யாரிவன்? என்ன சொல்கிறான்? என புரியாமல் அதைக் கேட்கக்கூட முடியாமல் அழுகையிலேயே இக்கேள்விகளை கண்களின் மூலம் கேட்கிறார் நாயகியின் அப்பா. நானும் நீலுவும் 2 வருசமா லவ் பன்றோம்யா.... காதல்னாலே எங்கப்பாக்கு புடிக்காதுன்னு உன்னை நெனச்சு நெனச்சு பயப்படுவாய்யா... அதலானதான் நாங்க இப்படி வெளியூர் வந்து சுத்தவேண்டியதாச்சு? உன்னோட ஜாதி வெறினால உம்பொண்ணை நீயே கொண்ணுட்டியேடா? இப்போ சந்தோசமா? எனக்கேட்டு, ஆவேசமாக அத்தந்தையின் சட்டையைப் பிடித்து, “சொல்லுடா இப்ப சந்தோசம் தானே?” எனக் கேட்டு அழுகிறான்.
திரைக்கதை 3: மருத்துவமனையின் வெராண்டாவிலேயே முந்தைய நாள் இரவிலிருந்து காத்திருக்கு ஹீரோ அவ்வறைக்குள்ளேயே பார்த்தவாறு இருக்கிறான். செவிலி உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருப்பதை பார்க்கும் அடுத்த சில நொடிகளில் அப்பெண்ணின் அப்பா அங்கு வந்து காத்திருப்பதையும் அழுது கொண்டிருப்பதையும் பார்க்கிறான். செவிலி வந்துவிட்டாள். ஹீரோவிடம், “ நீங்கள் தானே நீலு என்ற பெண்ணின் பிணத்தை வாங்க காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்கிறாள். அதற்கு ஹீரோ, கண்ணீருடன் இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்கிறான்.
என்ன? திரைக்கதை 3 எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறதா? ஆம்! அது கௌதம் மேனனின் திரைக்கதை. ’வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இருந்த ஒரு காட்சிதான் அது. திரைக்கதை 1 மற்றும் திரைக்கதை 2, முறையே இக்காட்சிகளில் விஜய் மற்றும் தனுஷ் நடித்திருந்தால், அவர்களின் வழக்கமான இயக்குநர்கள் எப்படி காட்சி அமைத்திருப்பார்கள் என்ற என் கற்பனை. சரி, எதற்காக இது? என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். இக்காட்சிகள் ஏன் இப்படி அமைக்கப்படுகின்றன?, அவை சொல்லாமல் சொல்லும் செய்திகள் என்ன? என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்!
திரைக்கதை 1 சொல்வது: ஹீரோவுக்கு அப்பெண்ணின் தந்தையை விட பாசம் அதிகமாம்! என்னவொரு பிதற்றல்! அதனால்தான் முன்னால் ஓடிச்சென்று கட்டி அழுவதாய் காட்சி அமைக்கிறார் டைரக்டர். இது எதற்காக என்றால், காதல் என்பது எவ்வளவு உன்னதனமான உணர்வு, அதில் நம் ஹீரோ எவ்வளவு சின்சியராக இருக்கிறான் என்று காட்ட. இதன் பின்னால் இருக்கும் நோக்கம்,ஏற்கனவே பருவ வயதின் காரணமாக காதல் என்று சுற்றித்திரிகிற நம் இளைஞர்களை அவனது உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவர்களை உருகச் செய்து தான் கல்லா கட்டுவதே ஆகும்.
திரைக்கதை 2 சொல்வது: என்னவென்றால், வேலை இல்லாதவனோ, வெட்டிப்பயலோ, எவனோ ஒருவன் தன் மகளைக் காதலித்துவிட்டால் உடனே பெற்றோர் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் காதல்தான் உன்னதமான உணர்வாயிற்றே? உணவு,உறைவிடத்திற்கு அடுத்தபடியாக ஒருவனுக்கு தேவையானது காதல்தானே? அதற்கு என்ன தகுதி வேண்டும். ஒரு ஆணாக பிறந்தவன் எந்த ஒரு பெண்ணையும் காதலிப்பதாக சொல்வது அவனது உரிமை. அவனுக்கே அப்பெண்ணை கட்டிக்கொடுக்க வேண்டியது அப்பெண்ணை பெற்றவர்களின் கடமை. இது இந்திய அரசியலைப்பு சட்டத்திலேயே இருப்பதாக நம் இயக்குநர்கள் சொன்னாலும் சொல்லுவார்கள்.. மாறாக எதிர்ப்பு தெரிவித்தால் அவன் ஜாதி வெறியன். இங்கே இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்கப் படுவது என்னவேன்றால் “நீ யாரை வேண்டுமானலும் காதலிக்கலாம். அதற்கு யாராவது தடையாக இருந்தால், காதலியின் பெற்றோராகவே இருந்தாலும் கூட ‘டேய்’ என்று சட்டையைப் பிடித்து மிரட்டலாம். ஏனென்றால் காதலை எதிர்ப்பவன் அசிங்கமானவன்”
திரைக்கதை 3 சொல்வது: காதலின் தந்தையை பார்க்கிறான். தன்னைப் போலவே அவருக்கும், ஏன் அதைவிட அதிகமாகக் கூட வலியிருக்கும் என்பதை உணர்கிறான். ஏற்கனவே தன் மகளை இழந்த சோகத்தில் இருப்பவருக்கு தான் அவருடைய
பெண்ணை காதலித்ததும் அதன் பொருட்டு அத்தந்தைக்கு தெரியாமல் ஊர் சுற்றியதும் அச்சமயத்திலேயே துரதிஷ்ட வசமாக விபத்து நடந்ததும் தெரிந்தால் அத்தந்தையின் மனது இன்னும் அதிக வலியை அடையுமே என யோசித்து காதலியின் முகத்தை பார்க்காமலேயே திரும்புகிறான். இந்த இடத்தில் ஒரு வசனம் கூட இல்லை. இதை நாயகனின் ஒரு சிறப்பியல்பாக கூட அத்திரைக்கதை சித்தரிப்பதில்லை. ’இது இப்படித்தானே நடக்க வேண்டும்’ என்பது போல ஒரு இயல்பான காட்சி. எத்தனை கண்ணியம்!
இந்த மூன்று திரைக்கதைகளிலும் இருக்கும் ‘attitude' வேறுபாடு புரிகிறதல்லவா? இந்த attitude வேறுபாடுதான் இவர்களுக்கான ரசிகர்களை உருவாக்குகிறது. இவ்வாறு ஹீரோ பார்ப்பவனின் மனம் போல நடப்பதால் அவனுக்கு ரசிகனாவதும் பின்னர் அந்த ஹீரோ செய்வதால் அதை இவனும் செய்ய ஆரம்பிப்பதும் ஒரு mutual reaction. தனக்கென உருவாகிவிட்ட ரசிகர்களை திருப்திப் படுத்த ஹீரோவும் அதே போன்ற சேஷ்டைகளை திரும்ப திரும்ப செய்கிறார். ஏற்கனவே அவர் ஸ்டாராகி இருப்பதால் புதிய தலைமுறை அவரை அப்படியே follow செய்ய ஆரம்பிக்கிறது. அதே attitude உள்ள இயக்குநர்கள்தான் அந்த குறிப்பிட்ட ஹீரோவை அணுகி படம் எடுக்கிறார்.
இந்த attitude-ம், cheap heroism-ம், மலிவான ரசனையும்தான் விஜய், தனுஸ் போன்ற நடிகர்களை என்போன்றவர்களுக்கு பிடிக்காமல் போகவும் அவர்கள் படங்களை முழுவதுமாக தவிர்ப்பதற்கும் காரணம். மாறாக விஜய் படத்தை பார்க்காமலிருக்க அஜீத் ரசிகானக இருப்பதுதான் காரணம் என்பதும் தனுஷ் கருப்பாக இருப்பதால்தான் அவரை பிடிக்கவில்லை என்பதோ சரியல்ல. ’காதல் கொண்டேன்’ போன்ற படங்களில் தனுஷின் நடிப்பை பாராட்டினோமே? ’காதலுக்கு மரியாதை’ படம் பார்த்துவிட்டு விஜயின் மீது எந்த எதிர்மறை விமர்சனமும் வைக்கவில்லையே?
சரி இவர்கள் மட்டும்தான் இப்படி நடிக்கிறார்களா? இவர்கள் படங்களில்தான் இப்படிப் பட்ட காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா என்றால் கட்டாயம் இல்லை. ’முன்பே வா என் அன்பே வா’ பாடலில் வகுப்பறைக்குள் அனுமதியின்றி நுழைந்து காதலியை கைப்பிடித்து இழுத்துவருவதும், காதலியுடன் தின்னையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நண்பனை பின்புறமாக இருந்து எட்டி உதைத்துவிட்டு சூர்யா அங்கே உட்காருவதுமான காட்சிகளும் கண்டிக்கப் படவேண்டியவையே. இவற்றை ஹீரோயிசமாக காட்டுவதால் பதின்ம வயதிலிருப்பவர்களுக்கு நாம் எதைக் கற்றுத் தருகிறோம் என்பது புரிகிறதா? பெரியோரை மதித்து நடக்கவேண்டும் என்ற உலகளாவிய கலாச்சாரத்தையே நம் இந்த இளைஞர்களிடத்தில் தேவையில்லாததாகவும் கோழைத்தனமாகவும் கற்றுத்தருகிறோம் இல்லையா? ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் காதலியின் அலுவலகத்துக்கு சென்று வரவேற்பரையில் சட்டையில்லாமல் அமர்கிறான் ஹீரோ. அங்கே அப்படி அமறக்கூடாது என்று வெளியே சென்று விடுமாறு கூறும் காவலாளியின் மீது வாந்தி எடுத்துவிடுவதாக பயமுறுத்துகிறான். இதுதான் ஹீரோத்தனமா? இவற்றையெல்லாம் நகைச்சுவையாக நம் மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்களா? என்ற எண்ணமே தலை சுற்ற வைக்கிறது. ‘ஹேய் என் ஆளு எங்க office வந்து எப்படி ரவுசு பண்ணினான் தெரியுமா’? என்று நம் பெண்களே இது போன்ற செயல்களை பெருமையாக பேசும்படி இத்திரைப்படங்கள் சமூகத்தை மாற்றிவிடுமோ என்ற பயம் எழுகிறது. சரி, மீண்டும் இப்பதியின் ஆரம்பத்தில் விட்ட இடத்திற்கு வருவோம். ஏன், விஜய், தனுஷ் மற்றும் ஓரளவுக்கு சிம்பு ஆகியோர்களை மட்டும் வெகுவாக வெறுக்கிறீர்கள்? ஏனெனில் அவர்களுடைய படங்களில் பெரும்பான்மையான காட்சிகள் இத்தகைய 'poor attitude'-லியே இருப்பதுதான் காரணம்.
சரி, இத்திரைப்பட காட்சிகள் சமூகத்தை நேரடியாக எப்படி பாதிப்பதாக சொல்கிறேன்? அது பற்றி அடுத்த பதிவில்...