Friday, September 10, 2010

1857 சிப்பாய் புரட்சி - உமா சம்பத்


சுபாஷ் சந்திரபோஸ் போன்றொருவரின் தலைமையில் போரிட்டு சுதந்திரம் கிடைத்திருக்கக் கூடாதா என்றொரு ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு. 1857-ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருட காலம்  நடந்த, ‘சிப்பாய் கலகம்’ என வெள்ளையர்களாலும்  ’சிப்பாய் புரட்சி’ என இந்தியர்களாலும் குறிப்பிடப்படும் சிறு-சிறு போர்கள் பற்றி படிக்கும்போது அந்த ஏக்கம் பெருமளவு தணிந்து பெருமித உணர்வு ஏற்படுகிறது.

இந்தியர்களுக்குள் கணன்று கொண்டிருந்த சுதந்திரதாகம், தொடர்ந்து நடந்துகொண்டிருந்த சுரண்டல், வெள்ளையர்களால் திணிக்கப்பட்ட கிருத்தவம் மற்றும் அதற்கு அவர்கள் பயன்படுத்திய பிறமத அவமதிப்பு என பல காரணங்களால் திட்டமிட்டு சிப்பாய்கள் செய்த போராட்டம். இதை, ‘துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றிக் கொழுப்பை தடவியதால் ஏற்பட்ட கலகம்’ என நமது வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் குறிப்பிடுவது எத்தகைய கொடுமையானது? பெரும்பாலும் நமது வரலாற்றுப்
புத்தகங்கள் ஆங்கிலேயர்களால் அவர்களது நோக்கிலேயே எழுதப்பட்டு அவற்றையே நாம் பயன்படுத்துவதால் வரும் தவறு என நினைக்கிறேன். இதுவரை அறிந்திராத பல்வேறு தகவல்களை இப்புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஜான்சி ராணி போன்ற ஒருசில தலைவர்களை போராட்டக்காரகளை மட்டும் நாம் அறிந்திருக்கிறோம்.

சுருக்கமாகச் சொல்வதானால், இந்தியா முழுவதிலும் ஆங்கிலேயரின் பல்வேறு ராணுவத் தளங்கலிலும் இருந்த இந்திய சிப்பாய்கள், சிறு-குறு மன்னர்கள் மற்றும் அவர்களின் படைகள், ஒரு சில மகாராஜாக்கள், புரட்சிக்காரகளாக மாறிய பொதுமக்கள் என அனைவருமாக சேர்ந்து ஆங்கிலேயர்களிடமே கைப்பற்றிய துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் உள் நாட்டு வெடிபொருட்களை கொண்டு தாக்கிய மாபெரும் போராட்டம். பல்வேறு ஊர்களையும் நகரங்களையும் முழுமையாக மீட்டு கருவூலங்களைக் கைப்பற்றி சுய ஆட்சி அமைக்க முடிந்த புரட்சி. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக சேர்ந்து நடத்திய போர்கள். பல்லாயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டதும் அதற்கு பழிவாங்க வெள்ளையர்கள் ஊர்களையே
கொலுத்தியதும் நிகழ்ந்த, அதன் காரணமாக இந்திய சுதந்திரப்போராட்டம் உலக அளவில் கவனிக்கப்படவும் குறிப்பாக இங்கிலாந்தில் மிகப்பெரிய சலனத்தை உண்டுபண்ணவும் காரணமாக இருந்த போராட்டம். இத்தனை நிகழ்ந்தும் நம்மால் வெற்றிபெற முடியாமல் போனது ஒரு துயரமே எனினும் இப்புரட்சியின் காரணமாக கிழக்கிந்திய கம்பெனியின் சர்வாதிகார ஆட்சி ஒழிந்து இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது மிக முக்கிய முன்னேற்றம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை எந்தப் பள்ளி ஆசிரியரும் அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி பாடம் நடத்தியுள்ளாரா/ நடத்துகின்றாரா எனத் தெரியவில்லை.

திட்டமிட்ட தேதிக்கு முன்னரே விபத்தாக புரட்சி தொடங்கிவிட்டதால் நாடு முழுவது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த முடியாமற்போனது, புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து வழி நடத்த தலைவர்கள் இல்லாமல் போனது, போதிய தளவாடங்கள் இல்லாமல் போனது, ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்த இந்திய ராணுவத்தினர் மற்றும் கூலி ஆட்கள் போன்ற காரணங்களால் 1857 புரட்சி தோல்வியில் முடிந்தது. இதில் நான் மிகவும் துர்பாக்கியமாக நினைப்பது சீக்கிய வீரர்கள் முழுமையாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்து புரட்சி வீரர்களுக்கு எதிராக போரிட்டது. வேலூர் சிப்பாய் புரட்சிதான் 1857 புரட்சிக்கு காரணம் என நாம் கூறிக்கொண்டாலும் தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க எந்த போராட்டமும் அந்த காலகட்டத்தில் நடக்கவில்லை என்பதே உண்மை. இதுவும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இல்லையே புரட்சியை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் இங்கும் அங்குமாக அலைந்திருக்க வேண்டியிருக்கும்.

நானா சாகிப், தாத்தியா தோபே, குன்வர் சிங்,ராணி பேகம் அஸ்ரத் மகால் ஆகியோர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய புரட்சித் தலைவர்கள்.

ஒரு நாவலைப்போன்ற விருவிருப்பான நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர் உமா சம்பத். இதற்கு முன்னர் நான் படித்த கிழக்குப் பதிப்பகத்தின் ‘வீர் சாவர்க்கர்’ போல் அல்லாமல் இதில் மூல வரலாற்று நூல்களின் பட்டியலை பிண்ணினைத்திருப்பது நன்று. புத்தகத்தின் துவக்கத்தில் முக்கிய நகரங்களுடன் ஒரே ஒரு இந்திய வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் மலைகள், ஆறுகள் போன்றவையும் குறிக்கப்பட்ட சிறு சிறு வரைபடங்கள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருந்தால் அது வாசிப்பு அனுபவத்தை இன்னும் மேம்படுத்தும். வரலாற்று காலகட்டத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவை ‘ஹிந்துஸ்தானம்’ எனவே குறிப்பிடும் ஆசிரியர் ஒரு சில நகரங்களின் பெயர்களை மட்டும் வடமொழி எழுத்துகள் விலக்கி தமிழ்ப்படுத்தியிருக்க வேண்டாம். இதுபோன்ற நுட்பமான திருத்தங்கள் editor-களாலேயே சரிசெய்யப்படுவது நடைமுறை சாத்தியமற்றதா எனத் தெரியவில்லை.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நீங்கள் அறிந்திராத பல செய்திகளையும் அறிமுகப்படுத்தும் உணர்ச்சிகரமான நூல் என்பதால் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த 1857 போராட்ட வரலாற்றை வீர் சாவர்க்கர் எப்படி எழுதியிருப்பார் என்ற ஆர்வத்தையும் இப்புத்தகம் ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/978-81-8493-116-7.html

3 comments:

யரலவழள said...

வரலாறு என்பது புதினம் அல்ல! புதினத்தைப் போல வரலாற்றை எழுதுவது அந்த வரலாற்றை ஒரு சுவைப்பண்டமாக மாற்றுகிற வேலை. எந்த இலக்கும் இல்லாமல் எழுத்தெனக் கிடைப்பவை அனைத்தையும் வணிகப்பண்டமாக மாற்றும் சில பதிப்பகங்கள் எல்லாவற்றையும் சுவைப்பண்டகளாக மாற்றிவிட்டன. அப்படித்தான் சிப்பாய் புரட்சி 1857 என்னும் புத்தகமும் எழுதப்பட்டிருக்கிறது. சில புத்தகங்களில் இருந்து வெட்டியெடுத்த குறிப்புகள், வலையத்தில் படியெடுத்த பகுதியில் சிலவற்றைத் தொகுத்து உருவாக்கப்பட்டிருக்கும் எவ்விதமான ஆய்வும் தேடலும் இல்லாத, நானும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன் எனச் சொல்லி மகிழ்வதற்குத் தோதாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அந்நூலை கிடைத்தற்கரிய நூல்களில் ஒன்றாக உங்களின் எழுத்து வன்மை கட்டமைக்கிறது.

சாணக்கியன் said...

யரலவழள, கருத்துக்கு நன்றி.

1857 போரைப்பற்றி தெரிந்துகொள்ள இதுதான் சிறந்த புத்தகம் என நான் எங்கும் சொல்லவில்லை. வரலாறு அசுவராரியமாகவே முன்வைக்கபட வேண்டும் என்றும் அவசியமில்லை. மதனில் ‘வந்தார்கள் வென்றார்கள்’ உட்பட பல புத்தகங்கள் வெற்றிபெற்றமைக்கு சுவாரசியமான நடையே காரணம். எப்படி இருந்தாலும் படிக்க வேண்டும் என்பதற்கு எல்லாரும் வரலாற்று மாணவர்களோ ஆராய்ச்சியாளர்களோ அல்ல.

எனக்கு உகந்ததாக நான் சொல்லியிருப்பது அப்புத்தகத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ள செய்திகள்தான். பள்ளியில் முதல் மாணவனாக இருந்தும் வரலாற்றில் ஆர்வம் இருந்தும் அந்த செய்திகள் தெரியாமலிருந்தது ஆச்சர்யம். உதாரணமாக ஜான்ஸி ராணி லட்சுமி பாய் சுதந்திர போராட்டதில் பங்குகொண்டாரென நமக்குத் தெரியும். அவர் 1857 புரட்சியில் தொடர்புடையவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மற்றபடி அவர் தகவல்களை அப்படியே சுட்டாரா, ஆராய்ச்சி செய்தாரா, இணையத்தில் எடுத்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அது குறித்த உங்கள் விமர்சனங்களை அப்படியே ஏற்கிறேன். பெங்களூரில் மென்பொறியாளராக இருக்கும் ஒருவர் விட்டமின்கள் பற்றிய புத்தகத்தை எழுதியிருப்பதைப் பார்க்கும்போது எனக்கும் இதே கோபமும் சிரிப்பும்தான் வந்தது.

அதே சமயம் 200 பக்கங்கள் கொண்ட ஒரு அறிமுக நூலுக்கு 10 ஆண்டுகள் ஆராச்சி செய்துதான் எழுத வேண்டுமென்பதல்ல. புத்தகத்தின் பின்னால் ஒரு 15 புத்தகங்களை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். அவற்றை அவர் படித்திருந்தாலே போதுமானது என நினைக்கிறேன்.

திருவாத்தான் said...

nice book .... very intersting....plz kindly reffer me these kind of books..