Saturday, October 23, 2010

நான் ஏன் எந்திரன் பார்க்கவில்லை?

இப்படி ஒரு பதிவை எழுதும் அளவிற்கு அது ஒன்றும் முக்கியமான விசயம் என நான் கருதாவிட்டாலும், இன்று வரை ‘ஏன் பார்க்கவில்லை?’ என சிலர் கேட்பதாலும், இதன் மூலம் எனது நிலைப்பாடுகள் சிலவற்றைச் சொல்ல வாய்ப்பு கிடைப்பதாலும் எழுதுகிறேன்.


* பொதுவாகவே, நான் அதிகம் திரைப்படம் பார்ப்பவனல்ல. புத்தகம், இசை, பயணம், ஊர் சுற்றல், நண்பர்களுடன் அரட்டை, தொலக்காட்சியில் பிடித்த நிகழ்ச்சிகள், சினிமா. இதுவே என்னுடைய பொழுதுபோக்கு வரிசை.

* அப்படி நான் பார்க்கும் படங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட, விமர்சகர்களால் பாரட்டப்பட்ட, நண்பர்கள் சான்றளித்த, என் ரசனைக்கு ஒத்துவரும் என நான் நினைக்கிற படங்களையே பார்ப்பேன். ஒருசில வேளைகளில் நண்பர்களுக்காக முன்பின் தெரியாத படங்களுக்கு செல்லும் விதிவிலக்குகளும் உண்டு. அந்த விதிவிலக்குகளுக்கும் சில விதிகள் வைத்துள்ளேன்!

* பிரம்மாண்டமாக ஒரு படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகவோ எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதற்காகவோ நான் எந்தப் படத்தையும் பார்ப்பதில்லை. இந்த வரிசையில், ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’ ஆகிய படங்களை நான் பார்த்தில்லை என்பதுடன் பார்க்கவேண்டும் என நினைத்ததும் இல்லை. ‘அந்நியன்’-இன் சமூக அக்கறை காரணமாக  அதன்மீது மட்டும் பின்னர் ஒரு மாற்றுப்பார்வை வந்தது.

* ’முதல்வன்’ வரை சங்கர் படங்கள் பிடித்தன. அதன் பின்னர் அவருடைய படங்களில் எனக்கு எதுவும் இருப்பதாகத்தோன்றவில்லை. ‘பாய்ஸ்’ படத்திற்கு முதலில் கொடுக்கப்பட்ட ‘A' தரச்சான்றுடன் வெளியிட்டிருந்தால் தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம், விருப்பமுள்ளவர்கள் மட்டும் பார்த்து படமும் ஓடியிருக்கும். அந்த நேர்மை இல்லை! பிரம்மாண்டம் செய்கிறேன் பேர்வழி என்று சங்கர், மலைக்கு பெயிண்ட அடிப்பதும் (அந்நியன்) 10 லட்சம் ரூபாய்க்கு போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்து பறக்கவிடுவதும் (சிவாஜி) எனக்கு சுத்தமாக உடன்பாடில்லாத விசயங்கள். இதுபோல வெட்டிச்செலவுகள் செய்யாவிட்டால் சங்கருக்கு எங்கோ அரித்துக்கொண்டே இருக்கும் போல!

* மணிரத்னத்தின் எத்தனையோ படங்களை ரசித்திருந்தாலும் ஆயுத எழுத்து சோர்வைத் தந்தது. மாணவர்கள் அரசியலில் ஈடுபடுதல் என்ற விசயத்தை fantasy-க்கு அடகு வைத்துவிட்டார். ஒரு வாரம் மட்டுமே ஓடிய ‘இருவர்’ படத்திற்கு மாபெரும் ரசிகன் நான். இவர் படத்தில் குழந்தைகள் கூட இயல்பாக பேசாமல் அதிபுத்திசாலிகளாகவே இருப்பதேன்? இருந்தாலும் ராவணம் பார்த்தேன். இனி, மணி அவ்வளவுதானா?

* சிவாஜி. சிவாஜிக்கு முன்னர் வந்த சந்திரமுகியையும் பின்னர் வந்த குசேலனையும் கூட பார்த்தேன், சிவாஜியை பார்க்கவில்லை. ஏனெனில் சிவாஜி பற்றி நான் கேள்விப்பட்ட செய்திகள் படித்த விமர்சனங்கள் எதுவும் எனக்கு அதன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. 'Rich get richer poor get poorer' என வசனம் பேசிவிட்டு ஊழலை துவம்சம் செய்வதாக உபதேசித்துவிட்டு ‘சிவாஜி’ பட ரசிகர்மன்ற டிக்கட்டை 1500 ரூபாய்க்கு விற்கும் ஏமாற்றுத்தனத்தை
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது லஞ்சம் கொடுப்பவனை கொலைசெய்யும் ஹீரோவின் படத்தை லஞ்சம் கொடுத்துப் பார்க்கிறான் தமிழன்(பிளாக் டிக்கட்)!


* சாலமன் பாப்பையா போன்ற மக்கள் விரும்பும் ஆளுமையை, தமிழறிஞரை, கல்லூரி ஆசிரியரைக் கூட்டிக்கொண்டுவந்து ‘எங்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, வந்து பழகுங்க’ என வசனம் பேசவைத்து அவரை அவமானப்படுத்தியும், ‘அங்கவை’,’சங்கவை’ என கடையேளு வள்ளல்களின் ஒருவரின் மகள்களது பெயர்களை வைத்து தமிழர்களை அவமானப்படுத்தியதாக தமிழ் உணர்வாளர்கள் குற்றம் சாட்டியும் ரஜினியோ சங்கரோ இதுவரை மன்னிப்பு கேட்காவிட்டால் கூட பரவாயில்லை, ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அந்தக் காட்சிகள் அத்தனை அசிங்கமாக அருவருப்பாக இருக்கின்றன...

* சன் குழுமத்தின் வியாபார உத்திகள் எப்போதுமே எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. தமிழகத்தின் சேட்டிலைட் சேனல்கள் சார்ந்த தொழில் நுட்பங்களில் முன்னோடியாக விளங்கியதைததவிர கடந்த 15 வருடங்களில் அவர்கள் செய்த உருப்படியானவை ஒன்றுமில்லை. கலாச்சாரச் சீரழிவிற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சன் டிவியை வெகு குறைவாகவே பார்த்துள்ளேன். விஜய் டி.வி.யின் எல்லா நிகழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவர்களுடைய மாற்று நிகழ்ச்சிகள்தான் மிகப்பெரிய ஆறுதலாக உள்ளன. சன் குழுமத்தின் ஏகாதிபத்தியத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். tata-SKY-இல் பங்குதாரராகச் சேர்க்கச் சொல்லி டாட்டாவிற்கு அழுத்தம் கொடுத்தவர்களாயிற்றே! தயாநிதிமாறன் communication அமைச்சராக இருந்தபோது 3-4 வருடங்கள் விஜயகாந்திற்கு மட்டுமல்ல, கன்னட சூப்பர் ஸ்டாரின் மனைவி பர்வதம்மாளுக்கே சேனல்கள் துவங்க அனுமதி
தரப்படவில்லை. இந்த அளவிற்கு non-ethics உடனும் அதிகார துஷ்பிரயோகத்துடனும் இருக்கும் சன் குழுமத்தை நான் முற்றாக நிராகரித்திருக்கிறேன். இது வரை சன் பிக்சர்சின் எந்தப்படத்தையும் பார்க்கவில்லை. காந்தி சொல்லிக்கொடுத்த ஒத்துழையாமயும் புறக்கணிப்பும்தான் இது!

* ரஜினியை அவரது நகைச்சுவையுடன் கூடிய ஹீரோத்தனத்திற்கும் கொஞசம் போல action-படங்களுக்கும் பிடிக்கும். பழைய படங்களில் சிறப்பாக குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ளார். எனினும் ‘அரசியலுக்கு வருகிறேன்’ என்று ஒவ்வொரு படம் வெளிவருவதற்கு முன்னும் நடித்து தன் படங்களை ஓடவைக்கும் நேர்மையற்ற லாப நோக்கு ஏற்புடையதல்ல. இவ்வளவு பெரிய நடிகர் இன்னும் தன் ரசிகர்களை பால் அபிஷேகம் செய்யும், படம் வெற்றி பெற மொட்டை போட்டு அலகு குத்திக்க்கொள்ளும், முட்டியிலேயே நடந்து மலை ஏறி பிரார்த்தனை செய்யும் நிலையிலேயெ வைத்திருப்பது சுய நலமின்றி வேறென்ன?

இப்படி எத்தனையோ கருத்துசார்,கொள்கைசார் காரணங்கள் எனக்கிருக்க, நான் ஏன் வயிற்று வலி வந்தவன் கழிவறையை நோக்கி ஓடுவதைப்போன்ற அவசர கதியில் போய் எந்திரனைப்பார்க்க வேண்டும்? முதல் நாளே டிக்கட் கிடைத்தும் நான் போய் பார்க்கவில்லை என்றால், ‘உனக்கு திமிர்டா’ என்கிறான் நண்பன் ஒருவன். நான் என்ன சொல்ல?

இவ்வளவு காரணங்கள் இருப்பினும் படம் வந்து சில வாரங்கள் ஆகி, சில நடு நிலை விமர்சனங்களை கேட்டு, படத்தில் பாதியளவு ரசிக்கத்தக்கதாகவும் சிறப்பாகவும் இருப்பதாக அறிவதால், நான் ஒன்றைப்பற்றி அறியாமலே, அனுபவமில்லாமலே prejuidice-ஆக விமர்சிப்பதாக நண்பர்கள் சொல்லாமலிருப்பதற்காகவும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்!

தொடர்புடைய பதிவுகள்:

எந்திரன் - FAQ's

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

( நேற்று 22-oct-2010 அன்று படம் பார்த்துவிட்டேன். அதன் முன்னரே பதியவேண்டும் என எழுதிவைத்திருந்தது!)

4 comments:

subra said...

எதோ படத்தில் எந்த எழவு வசனம் பேசுகிறான்
கொள்கை இல்லாதவன் பணத்திற்காக நடிக்கிறான்
நாம் முட்டாளாக அதை பார்க்கும்வரை ,ஆனா
மொட்டை போடுவது இன்னும் பல ,அதில் கொடுமயுலும்
கொடும 1500 அதன் நுழைவு சீட்டின் விலை ,யாரு தமிழன்
தானே எக்கேடு கேட்டல் நமக்கு என்ன கிடைத்ததை சுருட்ட
வேண்டியதுதானே

sun said...

loosu paya nadippa poi kasu koduthu saniyan vilaikku vangaratu pol

bandhu said...

உங்கள் கருத்துக்களுடன் உடன் படுகிறேன். ஏறக்குறைய இதே காரணங்களால் நானும் இந்திரன் பார்க்கவில்லை.

Thekkikattan|தெகா said...

a sensible essay!