Wednesday, December 08, 2010

சுனைப்பூ அழகி

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.
-கபிலர்.

குறுந்தொகை-142
திணை:குறிஞ்சி
தலைவன் கூற்று

உரை: வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறியமாட்டாள்,தூங்கும்  யானைபோல
பெருமூச்சுவிட்டு என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை.

-----------------------------------------------------------------

மேலே இருப்பதெல்லாம் படித்தது. ஜெயமோகனின் ‘காடு’ நாவலில் காட்டில் ஒரு இன்ஜினியருக்கும் காண்ட்ராக்டரின் உறவுக்கார இளைஞனும் பேசிக்கொள்வது....

சற்று யோசிப்போம்... சொற்களுக்கு பொருள் காண முயல்வோம்... அப்பாடல் கொணரும் சித்திரம்  என்ன?....

சுனைப்பூ - சுனை என்பது மலையில்  பெருகிவரும் ஊற்று.ஊற்று மலையிறங்கி சிற்றோடையாக காட்டில் வர, காட்டு மரங்களிலும் செடிகளிலும் இருந்து விழுந்த பூக்கள் அவ்வோடையில் மிதந்து வருகின்றன.

குற்றுத் தொடலை தை - அப்படி மிதந்துவரும் பூக்களை எடுத்து மாலை தொடுக்கும் பெண்

புனக்கிளி கடியும் பூங்கட் பேதை - கிளியை விரட்டும் பெரிய கண்களைக் கொண்ட அழகி. குடிலின் முன் தாணியங்களை உலர வைத்திருக்கிறார்கள். அதைக் கொத்தித் திண்ண கிளி வருகிறது. அக்கிளியை விரட்டுகிறாள். இங்கே ’பெரிய கண் அழகி’ எப்படி வந்தது? ‘பூங்கட் பேதை’ எப்படி பெரிய கண் அழகியானது?

தானறிந் தனளோ இலளோ - அப்பேதைப் பெண் அறிந்தாளோ இல்லையோ!

பானாட் பள்ளி யானையி னுயிர்த்தென் - நள்ளிரவில் படுத்துறங்கும் யானையைப்போல் பெருமூச்சுவிட்டபடி. ’பானாட்’ என்பது சுஜாதா சொல்லியிருப்பது போல் நள்ளிரவு தானா?

உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே - மனம் அவள் பின்னாலேயே சென்று கொண்டிருப்பதை! அவள் நினைவிலேயே உழன்று கொண்டிருப்பதை!

தன்னுழையதுவே- தன்+உழை+அதுவே. சரியான பொருள் என்ன?

ஐந்து வரிகளில் எத்தனை அழகான சித்திரத்தை கண்முன் நிறுத்துகிறார்! சுனைப்பூ என்ற ஒற்றை வரியில் ஒரு மலையையும் மலையடிவாரக் காட்டையும் கொண்டு வருகிறார்.  பூக்களைக் கோர்த்தபடியே கிளியை விரட்டுவது எதைக் குறிக்கிறது? மாலை நேரத்தை குறிப்பதெனக் கொள்ளலாம் அல்லவா? கண்டு மயங்கி தன் எண்ணத்தை இன்னும் தெரிவிக்காமல் அவள் நினைவிலேயே இருக்கும் தலைவணை பெருமூச்சுவிடும் யானைக்கு...அது காடல்லவா... இயல்பிலேயே கவிஞனுக்கும் உவமை காட்டிலிருந்தே கிடைக்கிறது... மனிதனுடைய பெருமூச்சே எப்படிப் பட்டது என நமக்குத் தெரியும்... யானையின் பெருமூச்சு எனில் அவனது தாபம் எத்தகையது என...சற்றே மிகையுடன் விவரிக்கிறார்... :)

கடைசி மூச்சை விடும் பெரு மிருகம் போல என நான் எழுதியதை நினைவு கூர்கிறேன்... கபிலரைப் போலவே எனக்கும் பெருமூச்சுவிடும் மிருகம் உவமையாகத் தோண்றியிருப்பதை எண்ணி குதூகலம் அடைகிறேன்! (சரி சரி, அடங்கு மவனே! )

 தானியத்தைத் தின்ன வரும் கிளியை தலைவியைச் சேரவரும் தலைவனுக்கு குறீயீடாகச் சொல்கிறார் எனக் கொள்ளலாம்.  கிளியை விரட்டுவது போல அப்பேதைப் பெண் தலைவனையும் விரட்டி விடுகிறாள்! :-) ‘அப்பா இருக்காரா? தண்ணி கிடைக்குமா?’ என ஏதோ ஒரு சாக்கில் அவன் அவளோடு பேச முயல... குழந்தை மனதுடைய அப்பேதை பேச்சை வளர்க்காமல் அதற்குரிய பதிலைச் சொல்லி அனுப்பிவிடுகிறாள்!.  இங்கே, கிளியை விரட்டுவதைக் குறிக்க ‘கடியும்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் கபிலர். கடிதல் என்றால் கடிந்துகொள்ளுதல்... அதாவது திட்டுதல்... தலைவனின் மனதைப் புரிந்துகொண்டு வேண்டுமென்றே விளையாட்டாக அவனை திட்டி அனுப்பிவிட்டாள் என்றும் கொள்ளலாமோ?

இக்காட்சியைக்கொண்டு  இன்று ஒரு அழகிய pop video எடுத்துவிடலாம் அல்லவா?

3 comments:

சாணக்கியன் said...

குறுந்தொகை அனைத்துப் பாடல்களும் வேண்டின்... http://www.chennailibrary.com/ettuthogai/kurunthogai23.html

Bee'morgan said...

அடடா.. என்னமா ரசித்து எழுதியிருக்கீங்க சாணக்கியன்.. வாழ்த்துகள். :) அதை எழுதிய அந்த கணத்தில் நீங்கள் உணர்ந்த பரவசம் போதும்.. அதுவே உங்கள் வெற்றிதான்.. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் என் பாட்டன் முப்பாட்டன்களில் ஒருவன் எழுதிய ஒரு காதல் கவிதையை என்னால் படிக்க முடிகிறது.. புரிந்து கொள்ள முடிகிறது.. அவன் கொண்ட உணர்வை என்னாலும் வாழ்ந்து பார்க்க முடிகிறது எனும் போது எழும் பரவசமே தனிதான்..

கிளியைப் போல் தலைவனை விரட்டுவது கொஞ்சம் அதீதமான கற்பனையாகத் தோன்றினாலும், அதற்கும் இடமிருக்கிறது.. நல்லதொரு முயற்சி தொடருங்கள்..

போகிற போக்கில் ”காட்”டைப் பற்றியும் சொல்லிவிட்டீர்கள்.. காடு ஜெமோ வின் அற்புதமான படைப்பு.. அதனைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாமே..!

சாணக்கியன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி மார்கன். ஆம்,பரவசம் உண்மைதான்.காடு படித்துவிட்டு அன்றிரவு காய்ச்சல் கண்ட இரவுபோலதான் இருந்தது. மறுவாசிப்பு முடிந்தவுடன் கண்டிப்பாக எழுதுவேன். அதற்கான குறிப்புகளை மனதில் தேக்கிக்கொள்கிறேன்... அது சரி, காடு குறித்து நீங்கள் இன்னும் பகிரவில்லையே!