1. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
தகழி சிவசங்கரன் பிள்ளை 1946-இல் எழுதியதை 1952-இல் மொழிபெயர்த்திருக்கிறார் சுந்தர ராமசாமி.ஆனால் 2000-இல் தான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது!
தானும் தோட்டியாக விரும்பாத ஒரு தோட்டியின் மகன். அதற்கு உதவக்கூடிய ஒத்துழைப்பு கொடுக்கவேண்டிய கடமை மட்டுமே உள்ளவளாக இருக்கவேண்டுமாம் அவள் மனைவி. எப்படியாவது தன் மகனை படிக்கவைத்து, பொருள் சேர்த்து வீடுகட்டி, நாகரிக வாழ்வு வாழ்ந்துவிட வேண்டும் என்பதுதான் அவனது லட்சியம். அந்த லட்சியத்துக்காக தன்
சொந்தபந்தங்களை நண்பர்களையே கூட பகைத்துக்கொள்ளத் துணிகிறான். இறுதியில் அவன் லட்சியத்தை எட்டினானா என்பதைச் சொல்லும் உருக்கமான கதை.
படித்துமுடித்தவுடன் அக்கதையிலேயே வரும் ஒரு கேள்விதான் என் மனதிலும் எழுந்தது. ‘தோட்டிகளை யார் உருவாக்கினார்கள்?’ என்பதுதான் அந்தக்கேள்வி. நம் மக்களுக்கு காலையில் எழுந்தவுடன் காட்டுக்குப் போவதுதானே வழக்கம்? ஒருவேளை தோட்டிகள் தெருக்களையும் கோயில்கள் போன்ற பொது இடங்களையும் கூட்டிப் பெருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களாக இருந்திருக்கக் கூடும். வெள்ளைக்காரர்கள்தான்
அவர்களை மலம் அள்ளும் வேலைக்கு உட்படச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
தமிழியின் மற்றொரு நாவலான செம்மீனை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறேன். மீனவப் பிண்ணனியில் ஒரு அருமையான காதல்கதையைக் கொண்ட இலக்கிய படைப்பு. இதற்கு முன்னர் படித்திராதவர்கள் கண்டிப்பாக தகழியை முயற்சிக்கலாம்.
2. கம்பன் என் காதலன் - சிவகுமார்
தேவி வார இதழில் தொடராக வெளிவந்துள்ளது. அவ்வளவுதான்! இதுவே போதும் என்று நினைக்கிறேன் அதன் இலக்கியத்தரத்தைச் சொல்ல!
நெல்லைக் கண்ணன் போன்ற சிறந்த பேச்சாளர்கள் பேசியோ ஜெயமோகன் எழுதியோ அறிமுகமான கம்பராமாயணத்தைப் பற்றிய புத்தகம் என்பதால் ஒரு ஏமாற்றம் அவ்வளவுதான். மற்றபடி மிகவும் மோசமில்லை. ராமாயணக்கதையை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரைச் சொல்வதற்கு வசதியாக 100 பாடல்களைப் பொறுக்கி எடுத்து அதன் நயத்தை எடுத்துக்கூற முயன்றிருக்கிறார். அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வாசிக்கலாம்.
சிவகுமாரைக் குற்றம் சொல்லமுடியாது. என்னதான் வாய்கிழிய இலக்கியம் பற்றிப் பேசினாலும் வைரமுத்து போன்றோர் வியந்து எழுதியிருந்தாலும் கம்பராமாயணம் படிக்க எவ்வளவு பேர் முயன்றுள்ளோம்? சிவக்குமார் என்ற நடிகர் எழுதியால்தானே வாங்கிப் படித்திருக்கிறேன்? அந்த அளவில் ஆரம்ப நிலை வாசகனுக்கு கம்பராமாயணத்தை அறிமுகப்படுத்தியதற்காக சிவக்குமாருக்கு நன்றி சொல்லலாம். ’இவ்வளவுதானா கம்பராமாயணம்’
என்று படிக்கும் யாரும் நினைத்துவிடக் கூடாதே என்பதுதான்
எனது வருத்தம். புத்தகத்தைவிட ஒலித்தஆகடு கேட்பது நல்ல அனுபவத்தைத் தரக்கூடும் என்று நினைக்கிறேன்!
சிவக்குமார், இதற்கு முன் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருந்தார். ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற அப்புத்தகம் சினிமாத்தொழில் குறிப்பாக நடிப்பது சிரமமான வேலை என்பதை அழுத்திச் சொல்லியிருந்தாலும் பல்வேறு செய்திகளைக் கொண்டு சுவாரசியமாகவே இருந்தது.
3. ஆர்.கே.சண்முகம் செட்டியார் - ஆர்.சுந்தர்ராஜ்
இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகத்தைப் பற்றி அவரது பேரன் தகவல்கள் சேகரித்து எழுதிய புத்தகம். 100 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய புத்தகம்.
சாதனைகள் பல புரிந்துள்ளவர், செட்டியார். மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மனிதர் அவர் என்பதற்கு அவரது பின்வரும் சாதனைகளே சாட்சி!!
சாதனைகள்:
கோவை மாநகராட்சி உறுப்பினர்
அதன் துணைத் தலைவர்
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்
மத்திய சட்டமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற சுயராஜ்ய கட்சியின் தலைமைக் கொறடா
மத்திய சட்டமன்றத்தின் தலைவர்
கொச்சி சமஸ்தான திவான்
இந்தியாவின் பொருள் வாங்கும் கழகத்தின் தலைவர்
தொழில் ஆய்வுக் கழகத் தலைவர்
இந்திய காப்பு வரிக்கழகத் தலைவர்
சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
கோவை மாவட்ட மக்களை ‘அட!’ போடவைக்கும் தகவல்கள், பின்வருவன...
ஆர்.கே.சண்முகம் தோற்றுவித்த அமைப்புகள்:
தென்னிந்திய மில் அதிபர்கள் சங்கம் (SIMA)
கோவை வர்த்தக சங்கம்
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (SITRA)
சென்னை-தமிழக வர்த்தகக் கழகம்
சென்னை தொழில் முதலீட்டுக் கழகம்
தமிழிசைச் சங்கம்
பேரூர் தமிழ்க் கல்லூரி
கோவை ஆர்.கே. ரங்கம்மாள் உயர்நிலைப் பள்ளி
Friday, February 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
நல்லத் தகவல் நண்பா!
தோழன் மபா
ஆர் கே சண்முகம் செட்டியார் புத்தகம் எங்கு கிடைக்கிறது?
யாரோ, ஆர் கே சண்முகம் செட்டியார் புத்தகம் எனது வீட்டிலும் கிடைக்கும் :) NHM.in தளத்திலும் கிடைக்கும் :)
Post a Comment