Monday, May 09, 2011

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அவசியமா?

08-மே,2011 அன்று விஜய் டீ.வி.யின் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் இலவசங்கள் சரியா தவறா என்ற பொருளில் விவாதம் நடந்தது. இலவசங்கள் வேண்டும் என்று பேசியவர்கள் ‘வேண்டாம்’ என்று பேசியவர்களின் மேல் இரண்டு குற்றச்சாட்டுகளை வைத்தனர். 

1. தங்களிடம் இல்லாத/தனக்குத் தேவையான பொருட்களை இலவசமாகக் கொடுத்தால் பெற்றுக்கொள்கிறார்கள். பெட்ரோல் விலையில் மானியம், சமையல் எரிவாயு விலையில் மானியம் போன்றவை.
2. தங்களின் அந்தஸ்தை விட கீழ் உள்ளவர்கள் தமக்கு சமமான பொருட்களை வைத்திருக்கக் கூடாது என்ற ஆதிக்க மனோபாவம்.


இவையிரண்டும் முக்கியமான கருத்துகளே! ஆனால் இலசவசங்களை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இந்த இரண்டு வகைக்குள் அடங்கிவிடுவர் என்பது தவறு. 50% சதவிகிதம் இருக்கலாம். உண்மையான சமூக அக்கறையுடனும் இலவசங்களை எதிர்க்கின்றவர்களும் கணிசமானவர்கள், இல்லையா?


நன்றாகப் பேசக்கூடிய முருகானந்தம் போன்றோர் இலவசத்துக்கு ஆதரவாகப் பேசியது துரதிஷ்டமே. மிகவும் வறுமையான சூழ் நிலையிலிருந்து முன்னேறி வந்து இன்றும் சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கும் சரத்பாபுவை ஏதோ ஏகாதிபத்திய பிரதிநிதி போல இவர்கள் corner செய்ய பேச்சுத்திறமை இல்லாததால் தன் கருத்தை சரிவர அவரால் விளக்க முடியவில்லை. ஆதிக்க்க மனோபாவம்தான் இலவசங்களுக்கு எதிராக சிலரை பேச வைப்பபது எந்த அளவு உண்மையோ அதே அளவு ‘நாங்கள் தான் ஏழைகளின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள்’ என்று நினைத்துக்கொள்வதாலும் காட்டிகொள்வதற்கும் சிலர் இலவசங்களை ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றியது.


அன்று அவர்கள் நெடுநேரம் இலவச லேப்டாப் திட்டத்தைப் பற்றி பேசினர். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுத்தால்தான் அவர்கள் கணினி அறிவு பெற்று மற்றவர்களுடன் போட்டி போட முடியும் என்றும் ‘தன் மகனும் லேப்டாப் வைத்திருக்கிறேன். நம் வீட்டு வேலைக்காரர்களின் மகனும் லேப்டாப் வைத்திருந்தால் அது தனது அந்தஸ்தை பாதிக்கும்’ என்று நினைப்பதால்தான் எதிர் தரப்பினர் அதை எதிர்ப்பதாகவும் சொன்னார்கள். இலவசங்கள் வேண்டாம் என்ற
அணியினர் ஏன் இதற்கு சரியான பதிலைத் தர முடியவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  நான் அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.


சரத்பாபு, அந்த லேப்டாப்கள் எந்த நோக்கத்திற்காகத் தரப்படுகிறதோ அந்த நோக்கம் 5% வரைதான் நிறைவேறும் என்று சொன்னார். அதாவது, அந்த லேப்டாப்கள் (இன்று பலர் வீடுகளிலும் இருப்பது போல்) திரைப்படங்கள் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கே அதிகம் பயன்படும். அதைப்பயன்படுத்தி அறிவு விருத்தி செய்து தன்னை தயார்படுத்திக்கொள்வது என்பது மிக சொற்ப மாணவர்களால் மட்டும் செய்யப்படும் என்றுதான் நானும் நினைக்கிறேன். அதையும் தாண்டி,  உண்மையான ஆர்வம் உள்ள மாணவர்களுக்குக்கூட லேப்டாப் கொடுத்துதான் அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது பொய். ஐ.ஐ.டி.யில் கணிப்பொறியியல் பட்டம் பெற்று மாதச்சம்பளமே சில லகரங்களில் வாங்கும் அளவு அறிவைப் பெருக்கிக்கொள்ளும் மாணவர்கள் கூட கல்லூரியின் ஆய்வுக்கூடக் கணினிகளைத்தான் பயன்படுத்தினர் என்பது நிதர்சனமான உண்மை. 

கல்லூரியில் ஒதுக்கப்படும் வேலை நேரத்தைத் தவிர பிற நேரங்களில் கணிப்பொறி ஆய்வுக்கூடத்தை பயன்படுத்த அனுமதிக்காத ஒரு தனியார் கல்லூரியில்தான் நான் பொறியியல் படித்தேன். கணிப்பொறி வாங்க வசதி இல்லாத நான், சனி ஞாயிறுகளில் கணிப்பொறி உள்ள பிற நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று எனது பணிகளைச் செய்துகொள்வேன். மாறாக சொந்தமாக கணிப்பொறி வைத்திருந்த மாணவர்கள் பலரும் அதை பாட்டுக் கேட்பதற்கும், ‘பிட்டு’ப்படம் பார்ப்பதற்குமே பயண்படுத்தினர். எனவே ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு லேப்டாப் என்பது கண்டிப்பாகத் தேவையில்லாதது.


நிற்க. இதைக்கூட விட்டுவிடுவோம். ஒவ்வொரு பள்ளிக்கல்லூரி மாணவரும் தங்கள் கணினி அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மதித்து அதற்கு லேப்டாப் கொடுப்பதுதான் சரியான தீர்வா என்று பார்ப்போம். அதற்கு மாற்றாக நான் முன்வைக்கும் தீர்வு சில அனுமானங்களின் அடிப்படையில் இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாணவர் சராசரியாக 2 மணி நேரம் தனது லேப்டாப்பை பயன்படுத்துகிறார் என்று கொள்வோம். 

நான்கு மாணவர்கள் 8 மணி நேரம் உபயோக்கின்றனர். இதற்கு பதிலாக அவர்களது பள்ளி/கல்லூரியில் அரசு ஓர் டெஸ்க்-டாப்பை நிறுவினால்(desktop) அதே நான்கு மாணவர்கள் இரண்டிரண்டு மணி நேரம் பயன்படுத்தலாம். அப்படிச் செய்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?


1. ஒரு டெஸ்க்டாப் Rs.15000, ஒரு லேப்டாப் Rs.20000 எனக்கொண்டால் நான்கு லேப்டப்புகளுக்கு பதில் ஒரு டெஸ்க்டாப் எனும்போது (80000-15000=)ரூ.65000 மிச்சம்.
2. விலைகொடுத்து வாங்க வேண்டிய மென்பொருள்களையும் அரசாங்கம் வழங்கினால் அதிலும் சுமார் 3/4 பங்கு மிச்சம். ரூ.5000 மதிப்புள்ள மென்பொருட்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டால் ரூ.15000 மிச்சம்.
3. ஒருவேளை விலைகொடுத்து வாங்க வேண்டிய மென்பொருட்களை கொடுக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை எனினும், முதலாவது பாயிண்டில் சொல்லியுள்ள மிச்சத்தொகையினைக் கொண்டு பல நல்ல மென்பொருட்களை மாணவர்களுக்கு அரசாங்கம் நிறுவித்தர முடியும். அந்த மிச்சத்தில் ஒரு பகுதியைக் கொண்டு கணினி அறைகளை நிறுவுவதற்கும் மேற்பார்வையாளர் சம்பளத்துக்கும் பயன்படுத்தலாம்.
4. நான்கு ஆண்டுகள் ஒரு மாணவர் இலவச லேப்டாப்பைப் பயன்படுத்துகிறார். அதன்பிறகு ஒரு வேலை கிடைத்துவிடுகிறது. அப்போது அவருக்கு தொடர்ந்து அந்த இலவச லேப்டாப் தேவையா? அதைத் திரும்பப்பெற அரசால் முடியுமா?
மாறாக ஆய்வறைகள் ஏற்படுத்தினால் அந்தக் கணினிகள் அடுத்த batch மாணவர்களாலும் பயன்படுத்தப்படும். ஒரு கணினியை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் எனக்கொண்டால் ஒரே ஒரு மாணவருக்கு பதிலாக 10 மாணவர்களால் அது பயன்படுத்தப்படும். அதாவது அதன் பயன் 10 மடங்கு அதிகமாகிறது.
5. மாணவர்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்தித் தரலாம். அதன் பயன்பாட்டைப் பற்றி தனியே சொல்லவேண்டியதில்லை.
6. லேப்டாப்பில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை சரிசெய்துகொள்ள மாணவர்களுக்கு பணவசதி இருக்குமா? இல்லாத நிலையில் அது கிடப்பிலே போடப்பட்டால் மொத்த முதலும் வீண் அல்லவா? ஆய்வுக்கூடத்தில் இந்தப் பிரச்ச்னை இல்லை. 
7. கணினி தவறான உபயோகத்துக்கு பயன்படாமல் கண்கானிக்க முடியும்.


நீயா நானாவில் விவாதிக்கப்படும் பல்வேறு விசயங்கள் முக்கியமானவையாக உள்ளன. நம்மால் அதில் பங்கெடுத்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இணையத்தில் விவாதம் நடத்துவது மிகுந்த பலனை அளிக்கும் என நம்புகிறேன். எனவே, இனிமேல் முடிந்த வரை எல்லாத் தலைப்புகளுக்கும் ஓர் பதிவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது!

கோபிநாத்தின் மின்னெஞ்சல் முகவரி யாரிடமாவது உள்ளதா? அவர் இணையதளம் ஏதும் வைத்துள்ளாரா?


தொடபுடைய பதிவுகள்:
'லேப்டாப்' வாங்க நெருக்கும் இன்ஜி. கல்லூரிகள். 
மேடைப்பேச்சு - நீயா நானா

9 comments:

சாணக்கியன் said...

ரெஜோவாசன் பேஸ்புக்கில் சொன்னது:

/நான்கு ஆண்டுகள் ஒரு மாணவர் இலவச லேப்டாப்பைப் பயன்படுத்துகிறார். அதன்பிறகு ஒரு வேலை கிடைத்துவிடுகிறது. அப்போது அவருக்கு தொடர்ந்து அந்த இலவச லேப்டாப் தேவையா? அதைத் திரும்பப்பெற அரசால் முடியுமா?
மாறாக ஆய்வறைகள் ஏற்படுத்தினால் அந்தக் கணினிகள் அடுத்த batch மாணவர்களாலும் பயன்படுத்தப்படும். ஒரு கணினியை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் எனக்கொண்டால் ஒரே ஒரு மாணவருக்கு பதிலாக 10 மாணவர்களால் அது பயன்படுத்தப்படும். அதாவது அதன் பயன் 10 மடங்கு அதிகமாகிறது. //

இதை நான் வழி மொழிகிறேன் .. மேலும் கலர் டிவிக்கள் விற்கப்பட்டதைப் போல லாப்டாப் களும் கணிசமான தொகைக்கு பிறருக்கு விற்கப்பட நேரிடலாம் ...

சாணக்கியன் said...

Beemargan said in email....

Good one chanakyan..

I haven't watched the program.. but your points are very much valid..

Balu said...

Instead of giving free laptops govt can give good computer to schools.

Since leader have good vision w'll not good policies which are really useful for people.

In debates people with good speaking skill wins.. person with less speaking skill and more points has less chance of winning..

Anyway govt is not going to give quality laptop.. :(

சுரேஷ் கண்ணன் said...

அன்புள்ள சாய் மகேஷ், இது குறித்து பஸ்ஸில் எழுதினது:

நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் (விஜய்டிவி) அரசு வழங்கும் இலவசங்கள், (திட்டங்கள், மான்யங்கள் உட்பட) தேவையா, அற்றதா என்ற தலைப்பில் விவாதம்.

ஆதவன் தீட்சண்யாவின் சொற்பிரயோகமான 'விளக்கெண்ணையில் குண்டி கழுவினாற் போல' என்பதற்குப் பொருத்தமாக வழவழவென்று விவாதம் சென்று கொண்டிருந்தது. 'இது எந்த மாநிலத்தின் திட்டமும் குறித்தல்ல, இந்தியா முழுமைக்கும் பொருத்தமானது' என்று சானல் முன்ஜாமீன் வாங்கிக் கொண்டது.

அரசு தரும் இலவசங்களை முற்றிலுமாக நான் ஏற்கமாட்டேன் என்று தெரிவித்த (கிழக்கு பதிப்பகம்) பத்ரி, பின்பு ஏன் இலவசத்திற்கு ஆதரவான தரப்பில் அமர்ந்திருந்தார் என்று தெரியவில்லை. ஓர் அரசாங்கம் எல்லாவற்றிலும் சக்தியை செலவழித்துக் கொண்டிருக்காமல் முக்கிய செயற்பாடுகளுக்கு மாத்திரம் குறுக்கிக் கொள்வது சிறந்தது என்கிறார் பத்ரி. அரசாங்கத்தின் திட்டங்களை 'உரிமை' என்று எதிர்பார்ப்பது தவறு என்கிறார்.

'சில பேர் இணைந்து போட்டு விடக்கூடிய ஒரு கிராமத்து சாலையை 'அரசு வந்து போட்டுத்தரட்டும்' என்று பல ஆண்டுகளுக்கு காத்திருக்கும், எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்கும் குறைகூறும் நிலை மாற வேண்டும்' என்பது இவரின் வாதம். பக்கத்தில் அமர்ந்திருந்த பேராசிரியர், அ.ராமசாமியே இதை மறுத்துப் பேசினார். 'அரசு தன்னை குறுக்கிக் கொள்வது மீண்டும் மன்னராட்சி காலத்திற்கே பின்னோக்கி அழைத்துச் செல்லும்'

இலவசம் தேவையில்லை என்ற தரப்பில் பலர் உளறிக் கொட்டினார்கள். கல்வி, மருத்துவம் கூட தேவையில்லை என்று வி்ட்டு பின்பு தலையைச் சொறிந்தார்கள். 'புட்கிங்' சரத்பாபு, லேப்டாப் தேவையில்லை என்று வாதாடினார். அதை பெரும்பாலான மாணவர்கள் effective ஆக பயன்படுத்த மாட்டார்கள் என்றொரு அபத்தமான காரணத்தை முன்வைத்தார். சரி. அப்படி படித்த மாணவர்களுக்கெல்லாம் உத்தரவாதமான வேலையை அரசால் உறுதிப்படுத்த முடியுமா? என்று லாஜிக் அல்லாத மொக்கையான வாதத்தை முன்வைத்தார். (அதற்காக இவரை எதிர்தரப்பில் அமர்ந்திருக்கும் முக்கிய நபர்கள் யார் யாரென தெரியுமா என்று கோபிநாத் கார்னர் செய்ய முயன்றது மேலதிக அபத்தம்).

சுரேஷ் கண்ணன் said...

வழவழவென்று சென்று கொண்டிருந்த விவாதத்தில் முதன் முதலில் நிதானமாகவும் அழுத்தமாகவும் பேசியவர் சொக்கன் என்கிற அரசியல் பிரமுகர். இலவசத் திட்டங்களை செலவு என்று பார்ப்பதை விட வருங்கால மக்களின் மீதான முதலீடு என்கிற பார்வை சற்று வித்தியாசமாக இருந்தது.

விவசாயியான செந்தமிழன், 'இலவச மின்சாரம் என்கிற ஏமாற்று வேலையெல்லாம் வேண்டாம். நியாயமான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தரமான மின்சாரத்தை அளித்தாலே போதுமானது' என்றார். நெல்லை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து விவசாயிகளிடமிருந்து அடித்துப் பிடுங்குவதை நிறுத்தினாலே நல்லது'

சிறப்பு விருந்தினராக வந்திருந்த முருகன் ஐஏஎஸ், இலவசங்கள் தேவையில்லை என்பதையே சொன்னார். திட்டக்குழு உறுப்பினராக வந்திருந்த இன்னொரு சிறப்பு விருந்தினர், பெரும்பாலோனார் குறை சொல்லும் இலவச தொலைக்காட்சி திட்டம், அரசு இதற்காக செய்யும் மொத்த செலவில் ஒரு சதவீதமே என்றார். (ஒரு சதவீதம் என்றாலும் அதை நியாயப்படுத்தலாம் என்று இவருக்கு யார் சொன்னது)

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களை அடையாளங் காண்பது மிகச் சிரமமானது என்பதும் இவர் அளித்த தகவல். இதனாலேயே சில திட்டங்களை எல்லோருக்கும் அளித்து விடுகிறோம் என்கிறார். ( எனில், வருமானத்தின் படி ரேஷன் கார்டுகளை பிரித்து வைத்திருப்பதை மாத்திரம் அரசு எப்படிச்செய்தது என்று எனக்கு குழப்பமாகவே இருக்கிறது).

()


இந்த விஷயத்தில் எனது கருத்து, மக்களின் அடிப்படையான வசதிகளுக்கு, கல்வி,மருத்துவம் போன்றவைகளுக்கு, அடித்தட்டு மக்களுக்கு தொலைநோக்கில் செய்யப்படும் திட்டங்களுக்கு இலவசமோ, மான்யமோ அளிப்பதை குறைசொல்லவில்லை. ஆனால் அவ்வாறு தரப்படும் இலவசமும் மான்யமும் சரியான நபர்களுக்குத்தான் செல்கிறதா என்பதை கறாரான கவனத்துடன் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால் தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பொறுக்குவதற்காக, அரசுப் பணத்தை வீணடிக்கும் இலவச தொலைக்காட்சி, மிக்சி போன்ற திட்டங்களை அறிவிப்பது வெளிப்படையான அநியாயம். ஏழைகள் தொலைக்காட்சியை கண்டு களிக்கக்கூடாதா என்று கேட்டார்கள். இன்று அடித்தட்டு மக்கள் உட்பட ஏறக்குறைய பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி வந்து வி்ட்டது. அந்த அளவிற்கு மக்கள் சினிமா மற்றும் சீரியல் போன்ற பொழுதுபோக்குகளில் ருசி கண்டு விட்டார்கள். இந்த இலவச தொலைக்காட்சி திட்டத்தால் வழங்கப் பட்டது பெரும்பாலும் அடிசனலாக இன்னொரு பெட்டியாகத்தான் பெரும்பாலான வீடுகளில் அமாந்திருக்கிறது. அல்லது வந்து விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் உண்மையாகவே பயன்பெறுவோர் மிகக் குறைந்த சதவீதமே. (குறைந்த பட்சம் இவர்களுக்கு மாத்திரமாவது தேர்தல் அல்லாத நேரத்தில் அரசு தொ.பெட்டி தர முயன்றிருக்கலாம்).

மக்களை தற்காலிக மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அந்த மயக்கத்தில் இருக்கும் போதே அவர்களின் கோவணத்தை திருடாமல், அவர்களின் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களுக்கு அரசுத் திட்டங்களை அமைத்தால் சிறப்பானதாக இருக்கும்.

'மீனைத் தராமல் மீன் பிடிக்கக் கற்றுத்தருவதுதான்' தன் குடிகளின் மீது உண்மையான அக்கறையுள்ள ஒர் அரசின் செயற்பாடாக இருக்கும்.

சுரேஷ் கண்ணன் said...

அன்புள்ள சாய்மகேஷ்:

உங்கள் பதிவு குறித்து:

நீங்கள் குறிப்பி்ட்டிருப்பதும் சிறந்த யோசனைகள்தான் என்றாலும், கணினி மூலம் தம் கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்ள ஆர்வமுள்ள விரும்பும் மாணவர்,அரசு அமைப்பை நிர்வாகத்தை நம்பியிருப்பது அவரது ஆர்வத்திற்கு பெரும் தடையாகவே அமைந்து விடும் என நினைக்கிறேன். அரசு நூலகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை பேர்களால் தாங்கள் விரும்புகிற நூற்களை எடுக்க முடிகிறது? பெரும்பாலானவை பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கிறது அல்லது நூலகத்தின் மூலையில் தூசுபடிந்து பாழ்பட்டுக் கிடக்கிறது.

இலவச பஸ் பாஸ் பெறும் மாணவர்கள், நடத்துனர்களால் தினம் தினம் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நாமும் தினம் பார்க்கிறோம். நீங்கள் குறிப்பிடும் மையங்களுக்கும் இதே நிலை பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

இலவச லேப்டாப்கள் அவற்றின் உண்மையான பயன்பாடுகளைத்தாண்டி பொழுபோக்காக பயன்படுக்கூடும் என்பதை மறுக்கவில்லை. ஆனால் சுயமாக ஒரு கணினியை பெறும் ஒரு கிராமத்து மாணவனுக்கு அது நியாயமான தன்னம்பிக்கையைத் தரும் என்றே எதிர்பார்க்கிறேன். ஆர்வமுள்ள மாணவர்கள், பொழுதுபோக்குகளைத் தாண்டியும் அதை தமது கல்விப் பயனுக்காக நிச்சயம் உபயோகிப்பார்கள் என நம்புகிறேன். உருப்படியில்லாத பல திட்டங்களுக்கு பணத்தை வீணடிக்கும் அரசு, இதனால் சிலவற்றை ஒருவேளை இழந்தால் அதனால் ஒன்றும் குடி முழுகி விடாது. தரமான இளைய தலைமுறையினர் உருவாக இந்த சிறிய இழப்புகளை அரசு நிச்சயம் பொறுத்துக் கொள்ளலாம்.

சாணக்கியன் said...

சுரேஷ் கண்ணன்,
வருகைக்கும் கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கும் முதலில் நன்றிகள் :)

ஆம்,பத்ரி எதற்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்தார் என்று என்க்கும் தெரியவில்லை. அரசாங்கம் core துறைகளை மட்டும் வைத்துக்கொள்ளும் அளவுக்கு நம் நாடு இன்னும் mature ஆகவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

/* இலவசம் தேவையில்லை என்ற தரப்பில் பலர் உளறிக் கொட்டினார்கள்.
*/
இந்தத் தரப்பில் சரியான பாயிண்ட்களை பேச ஆளில்லாததினாலேயே இது தவறான தரப்புப்போல பலவீனமாக காட்சியளித்தது.

/* 'புட்கிங்' சரத்பாபு, லேப்டாப் தேவையில்லை என்று வாதாடினார். அதை பெரும்பாலான மாணவர்கள் effective ஆக பயன்படுத்த மாட்டார்கள் என்றொரு அபத்தமான காரணத்தை முன்வைத்தார் */
இதை அபத்தமான வாதமாக நான் நினைக்கவில்லை. இலவச டி.வி.கொடுத்தால் மக்களுக்கு உலக அறிவு கிடைக்கும் என்று சொன்னது எந்தளவுக்கு நிஜமோ அந்தளவுக்குதான் நிஜம். 10% மாணவர்கள் வேண்டுமானால் லேப்டாப்பை சரியான முறையில் உபயோகிக்கலாம். அதற்காக அவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? வேறு வழிகள் இல்லையா? என்று யோசிக்கலாம் என்கிறேன். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், சுத்தமான குடி நீர் மட்டும் கழிவரை(முக்கியமாக மாணவிகளுக்கு), இடிந்து விழாத கட்டிடங்கள், டியூசனுக்கு வரச்சொல்லாமல் வகுப்பில் ஒழுங்காக பாடம் நடத்தும் ஆசிரியர் போன்ற அடிப்படைகளே ஏழை மாணவர்களுக்கு போய்ச்சேரவில்லை. இந்த சூழ் நிலையில் சற்றே தன்னம்பிக்கை தருவதற்காக லேப்டாப்பில் இன்வெஸ்ட் செய்ய வேண்டுமா?

சாணக்கியன் said...

/* அப்படி படித்த மாணவர்களுக்கெல்லாம் உத்தரவாதமான வேலையை அரசால் உறுதிப்படுத்த முடியுமா? என்று லாஜிக் அல்லாத மொக்கையான வாதத்தை முன்வைத்தார். (அதற்காக இவரை எதிர்தரப்பில் அமர்ந்திருக்கும் முக்கிய நபர்கள் யார் யாரென தெரியுமா என்று கோபிநாத் கார்னர் செய்ய முயன்றது மேலதிக அபத்தம்).
*/
200% மிகச்சரி.

செந்தமிழன் நன்றாக பேசினார். பத்ரியை எதிர்த்த பேராசிரியர் நன்றாகப் பேசத்தெரிந்ததினாலே மிரட்டல் தொனியில் சில தவறான கருத்துகளை பதிவுசெய்தார்.

/*ஒரு சதவீதம் என்றாலும் அதை நியாயப்படுத்தலாம் என்று இவருக்கு யார் சொன்னது */

இப்படி கேட்கும் நீங்களே,கீழ்கண்டவாறு சொல்லியிருப்பது முரண் :). திட்டக்குழு உறுப்பினரும் நீங்கள் கீழே சொல்லியுள்ள தொனியில்தான் சொன்னார் என்று கொள்ளலாம்!

/*உருப்படியில்லாத பல திட்டங்களுக்கு பணத்தை வீணடிக்கும் அரசு, இதனால் சிலவற்றை ஒருவேளை இழந்தால் அதனால் ஒன்றும் குடி முழுகி விடாது. தரமான இளைய தலைமுறையினர் உருவாக இந்த சிறிய இழப்புகளை அரசு நிச்சயம் பொறுத்துக் கொள்ளலாம். */

/* அரசு அமைப்பை நிர்வாகத்தை நம்பியிருப்பது அவரது ஆர்வத்திற்கு பெரும் தடையாகவே அமைந்து விடும் என நினைக்கிறேன் */

அரசாங்க அமைப்புகள் இப்படித்தான் இயங்கும் என்று நாம் ஏற்றுக்கொள்வதும் அதை சரிசெய்ய முடியாது என அரசாங்கமே சொல்வதைக் காட்டிலும் அசிங்கம் ஏதுமில்லை. அரசு இலவச மருத்துவமனை நடத்தும் ஆனால் தரமாகவும் முறையாகவும் இருக்காது. இலவச பள்ளிக்கூடங்கள் நடத்தும் ஆனால் தரமாக இருக்காது. எனவே இலவச மருத்துவக்காப்பீடு வழங்கும், தனியார் கல்விக்கூடங்களில் மாணவனுக்கு கல்விக்கட்டணத்தைக் கட்டும்!.... எத்தனை பெரிய ஆபத்தான அபத்தம் இது?

சாணக்கியன் said...

/*
அரசு நூலகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை பேர்களால் தாங்கள் விரும்புகிற நூற்களை எடுக்க முடிகிறது? பெரும்பாலானவை பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கிறது அல்லது நூலகத்தின் மூலையில் தூசுபடிந்து பாழ்பட்டுக் கிடக்கிறது.
*/

அரசு நிர்வாகத்தை சீர் செய்வது பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். இங்கும் வேறுமாதிரி யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

1. முதலில் படிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த எந்த முயற்சியையும் அரசும் தனியார் கல்விக்கூடங்களும் எடுக்கவில்லை.
வீடிகேம்ஸ் விளையாடி கேபிள் டிவியில் படம்பார்த்துதான் பொழுதைக் கழிக்கிறது இளைய சமுதாயம். தனியார் பள்ளிகள் பலவற்றில் மைதானங்களே இல்லை. அரசுப்பள்ளிகளில் மைதானங்கள் இருக்கின்றன ஆனால் உபகரணங்கள் இல்லை! என்ன மாதிரியான சூழ் நிலையில் இன்றைய மாணவர்கள் வளர்கிறார்கள்!?

2. ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள நூலகங்களில் மாணவர்களை அனுமதிப்பதில்லை. புத்தகங்கள் தொலைந்துவிடுமாம். சும்மா பூட்டியே கிடக்கின்றன நூலகங்கள்.

இதையெல்லாம் சரிசெய்யாமல் இலசக் கணினியும் இண்டெர்னெட் இணைப்பும் வழங்கினால் அவர்களாகவே தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வார்கள் எனபது எத்தகைய அபத்தம்!

அடிப்படைகளை மாற்றாமல் சரிசெய்யாமல் புதிய வசதிகளை கொடுப்பதால் மாற்றங்கள் வந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை!!

நிகழ்ச்சியில் ஒருவர் கூறியதுபோல, அந்த இலசத்துக்கு ஒதுக்கும் தொகையை அவர்களுக்கே கொடுங்கள்,ஆனால் எதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டுமோ அவற்றுக்கு கொடுங்கள்!. முருகானந்தம், ‘எது அடிப்படைத் தேவை எது ஆடம்பரத்தேவை என்பதை அவர்களே முடிவுசெய்து கொள்ளட்டும்’ என்றார். இவ்வளவு அபத்தமான ஒரு கருத்தை ஒரு கூட்டத்தில் எப்படிச் சொல்ல முடிகிறது என்று எனக்கு வியப்பாக உள்ளது.

சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு குடும்பத்தில் பட்ஜெட் போடும்போது எப்படி முன்னுரிமை கொண்ட விசயங்களைத் தேர்ந்தெடுப்போமோ அப்படிதான் அரசின் பட்ஜெட்டும் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு நல்ல உணவையும் கல்விச் சூழலையும் ஏற்படுத்தித் தராத குடும்பத்தலைவன் அதிக பாசத்தினாலேயே கூட பகட்டான ஆடைகளையும் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கித்தந்தால் அது தவறே. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் உனக்கு ஏன் பொறாமை என்று கேட்பவர்கள் மிகப்பெரிய குற்றத்தை அந்தக் குழந்தைகளுக்கு செய்கிறார்கள். இலவசங்கள் இப்படிப் போய்விடக்கூடாது!