Tuesday, June 07, 2011
அழகர் சாமியின் குதிரை
இரண்டு மணி நேரத்தில் ஒரு அழகிய தமிழ்ப் படம். இதுவே ஒரு பெரிய மகிழ்ச்சி. இரண்டரை மணி நேரம் ஓட்ட வேண்டும் என்ற கட்டாயத்துக்காக நீட்டிக்கப்பட்டு சொதப்பப் பட்ட படங்கள் பல. மூன்றே மூன்று பாடல்கள். அதில் ஒன்று மட்டுமே சற்றே திணிக்கப்பட்டது. ஒரேயொரு இயல்பான சண்டைக்காட்சி.
முதல் முறையாக படத்தின் மூலக்கதை (பாஸ்கர் சக்தியின் ஒரு சிறுகதை)-யை படித்துவிட்டு படம் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஒரு முழு நீளத்திரைப்படத்திற்கான பரந்துபட்ட கதைக்களம் இல்லாத சிறுகதையை கடைசிவரை சுவாரசியம் குறையாத ஒரு திரைப்படமாக மாற்றியதற்கு எழுத்தாளருக்கும் இயக்குநருக்கும் வாழ்த்துகள்!
ஊரில் திருவிழா அறிவிக்கப்பட்டு திருவிழா நடந்து முடிவதற்க்கான இடைவேளியில் நிகழும் சம்பவங்கள்தான் கதை. அழகர்சாமி என்னும் உள்ளூர்க்கடவுளின் மரக்குதிரை வாகனம் தொலைந்துபோக, திருவிழா நடக்குமா என்ற பதைப்பு வந்து, மாற்றாக ஒரு நிஜக்குதிரையை அழகர்சாமியே அனுப்பி வைக்க(!), சற்றே நிம்மதி வர, உடனே அந்நிஜக்குதிரையின் உரிமையாளனும் குதிரையைத் தேடி வந்துவிட, திருவிழா நடந்ததா? மரக்குதிரை என்னானது? என்பதற்கான விடைதான் கதையின் 3 line (பின்னே? இத்தனை கமா போட்டுவிட்டு, கதையின் ‘ஒன்லைன்’ என்று எப்படிச் சொல்வது? !!). இதற்கு நடுவே, திருவிழா நடக்கும் பௌர்ணமிக்குள்ளாக குதிரையுடன் திரும்பிப்ப் போகாவிட்டால் அவன் திருமணம் நின்றுவிடும், வருங்கால மனைவி இறந்துவிடுவாள் என்கிற மற்றுமொரு முடிச்சு!
பல இடங்களில் அனைவரும் வாய்விட்டுச் சிரிக்கின்றனர். அதிலும் சிறுவர்கள், கார்ட்டூன் பார்ப்பது போல் கலகலவென சிரிக்கிறார்கள். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எடுத்திருக்கிறார்கள். அதற்காக making-இல் அசட்டையாக இருந்திருக்கலாமா? திருவிழாவப் பத்திச் சொன்னா உனக்கு புரியாது பாட்டா பாடினாதான் உனக்குப் புரியும் எனச்சொல்லிவிட்டு ‘அடியே இவளே ஊருக்குள்ளே திருவிழாவாம்’ என்று துவங்கி காமிரா அந்த பெண்பாத்திரத்திலிருந்து நகரும் வரையான் விநாடிகளும், ‘அய்யோ எம் பையன் தாழ்த்தப்பட்ட சாதிப் பொண்ணோட ஓடிப்போயிட்டானாமே’ என்று ஊர் பிரஸிடண்ட் கதறும் இடங்களும் மிகச் செயற்கையாக இருந்தன.
’சின்ன சாதிப் பொண்ணோட’ என இருந்த வசனத்தை தணிக்கையில் ‘தாழ்த்தப்பட்ட’ என்று மாற்றிவிட்டனராம். இது மிகவும் செயற்கையாக இருக்கிறது என்றொரு பேச்சு எழுந்துள்ளது. உண்மையில், இது சாதிப் பிரச்சனையை பற்றிய படமே அல்ல. காதலிக்கும் இருவர் திருமணம் செய்துகொண்டுவிட்டனர் எனக் காட்டவேண்டும், அவ்வளவுதான் திரைக்கதையில் தேவைப் பட்டுள்ளது. ‘எங்கிட்ட சொல்லாமையே கல்யாணம் பண்ணிக்கிட்டானே’ என்றோ’ அல்லது எளிமையாக ‘வேற சாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டானோ’ என்றே வைத்திருக்கலாம். சரண்யா மோகனை மலைஜாதிப் பெண்ணாகக் காட்ட கொஞ்சம் ஒப்பணை செய்திருக்கலாம்.
இசை இளையராஜா. திணிக்கப்பட்டுள்ள டூயட் பாடல் கேட்க இதமாகத்தான் இருக்கிறது. ஆனால் மற்ற இரு பாடல்களும் படத்திற்கு வலு சேர்க்கவும் கதையை நகர்த்தவும் நன்கு பயன்பட்டுள்ளன. ’குதிக்கிற குதிக்கிற குதிரக்குட்டி’ என்ற பாடலை இளையராஜா ஒரு குழந்தையைப் போல் குரலை மிமிக்ரி செய்து பாடியுள்ளார். அப்புவுக்கு அழகான சரண்யா நிச்சயமானவுடன் இரண்டாம் முறையாக இப்பாடல் ஒலிக்கும் போது நமக்குள்ளும் உற்சாக கரைபுரள்கிறது. தான் உச்சத்தில் இருந்தபோது தன் பாடல் திறமைக்கு அதிகம் சோதனைகள் வைத்துக்கொள்ளாத ராஜா இப்போது புதுமைகளை முயற்சித்துப் பார்ப்பது வியப்பளிக்கிறது. வால்மீகி படத்தில் ‘என்னடா பாண்டி என்னபண்ணப் போற’ என்ற பாடலையும் சமிபத்தில் மிகவும் வித்தியாசமாகப் பாடி இருந்தார் ராஜா. இப்பொழுது அவருக்கு நேரம் அதிகமிருக்கிறது என்று நினைக்கிறேன்! கிராமியக்கருவிகளை அல்லது அதுபோன்ற சாயலை ஏற்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்தி இருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்றாலும் ஹங்கேரிக் கலைஞர்களை பயன்படுத்தி ராஜா அளித்திருக்கும் பின்னணி இசை எந்த உறுத்தலையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. படத்திற்கு ஒரு richness ஐ அளித்திருக்கிறது இசை!.
படத்தின் பலம் 1) நகைச்சுவைக் காட்சிகள் 2)சில அற-உணர்வுக் காட்சிகள். போலீஸ் ஸ்டேசனனில் ஊர்க்காரர்கள் செய்யும் அலும்பு, தெரியாத தகவலைத் தெரிந்ததுபோல் சொல்ல பரோட்டாக்களையும் ஆம்லெட் ஆப்-பாயில்களையும் கமிசனாக விழுங்கும் சிறுவன், நள்ளிரவில் ரோந்து செல்லும் இளைஞர்கள் பார்க்கும் சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஆகிய தொடர் நகைச்சுவைக் காட்சிகளின்போது விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். மேலும் ஆங்காங்கே தூவியது போல் வசனங்களில் சில நகைச்சுவைத் துணுக்குகள். ஊர்க்காரர்கள் எல்லோரும் போட்டு அடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு விதவைப் பெண் அவர்களைத் தடுத்து அப்புவுக்கு தண்ணீரும் சாப்பாடும் தருவது, அப்புவின் திருமணம் நின்றுவிடலாம் என்ற அபாயத்தை அறிந்து அவன் குதிரையோடு தப்பித்துச் செல்ல ஊர் இளைஞர்கள் உதவ முன்வரும் போது, திருவிழாவால் ஊரே சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தன்னால் பலரது சந்தோசத்திற்கும் ராட்டினாக்காரர்கள், மைக்செட் காரர், கரகாட்டக் குழு போன்றோரின் பிழைப்புக்கும் பங்கம் வர வேண்டாம் என எண்ணி, மறுத்து, திருவிழா முடியும் வரை ஊரிலேயே தங்கிவிடுவதாக அப்பு சொல்வது போன்றவை உணர்வுப் பூர்வமான காட்சிகள். ஒரு சிறிய படத்தின் ஆன்மாவாக இவையே போதுமானவையாக உள்ளன.
ஒரு படத்தை பார்த்தவுடன் மற்றவர்கள் அவர்களிடம் மற்றவர்கள் எதிர்பார்க்கும் ஒரே பதில் வொர்த்தா-வொர்த்தில்லையா? என்பதுதான். இப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் என்று பரிந்துரைப்பேன்!
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment