Tuesday, July 19, 2011

பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன்

அரசியல் கட்டுரைகளுக்காகவே பெரிதும் அறியப்பட்ட, வணிக எழுத்தாளரென கருதப்படும் பா.ராகவனின் வேறுமுகத்தைக் காட்டும் புத்தகம். தலைப்பு என்னை ஈர்த்ததால்தான் வாங்கினேன். பல முக்கிய எழுத்தாளர்களையும் அவர்களது சிறந்த படைப்புகளையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

இலக்கியப் படைப்புகளின் குவியிலில் எல்லா சிறந்த படைப்புகளையும் எப்போது படித்து முடிப்பது? என்றொரு அயர்ச்சி எப்போதும் எனக்குண்டு. இயல்பிலேயே மெதுவாக வாசிக்கும் வழக்கம் உள்ளமையால் படிக்க வேண்டிய புத்தகங்கள் கூடிக்கொண்டே போகின்றன. எனவே, பரிந்துரைகள் எப்போதும் எனக்கு உதவியாக இருந்துள்ளன. நாம் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு நபர், சுவையாக ஒரு புத்தகத்தைப் பற்றிச் சொல்லி அதை சிபாரிசு செய்தால் உடனே மனதில் கொள்வேன்.

ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பரிந்துரைத்துள்ள, தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய 100 சிறுகதைகள் மற்றும் நாவல்களின் பட்டியலை சேமித்து வைத்துள்ளேன். அவற்றில் 5 முதல் 10 புத்தகங்களை படித்திருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது! அவ்வகையில் இது பா.ரா.வின் ரசனை சார்ந்த சிலாகிப்புகள்! பா.ரா.விற்கு இருக்கும் இலக்கிய அறிமுகமும் முதல் அவரே நாவல் வரை புனைவில் முயற்சித்திருப்பதும், ‘அட!போடவைக்கும் புதிய செய்திகள்.

ஒரு நாவலை எடுத்துக்கொண்டு அதன் கதையை விவரித்து சிறப்புகளைச் சொல்லும் வழக்கமான வடிவத்தை பா.ரா. எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள், அவரது சொந்த வாழ்க்கை, குறிப்பிட்ட படைப்பை அவர் எழுதிய சூழல், எழுதக் காரணம் மற்றும் அப்படைப்பு தனக்கு அறிமுகமான விதம், தான் படித்த காலம், அவ்வாசிரியர்களோடு செய்த உரையாடல்கள் ஆகியவற்றையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார். கல்கியில் தொடராக வெளிவந்தைவையாம் இக்கட்டுரைகள்.

அப்படைப்புகளைப் பற்றி சிறு குறிப்புகளை தர முயல்கிறேன்.

1. அலை உறங்கும் கடல் - பா.ராகவன்
  பா.ரா.வும் அவரது நண்பர் வெங்கடேஷும் எப்படியாவது ஒரு நாவலை எழுதிவிடுவது என்ற முடிவோடு, ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு கன்னியாகுமரியில் ராமகிருஷ்ண மடத்தில் போய்த்தங்கி இருந்து முயற்சி செய்திருக்கிறார்கள்! அப்படி எல்லாம் எழுதிவிட முடியாது என்பதைப் புரிந்துகொண்டு ஊர்த்திரும்பியது மட்டுமல்லாமல் அங்கே எழுத ஆரம்பித்த கதையை அப்படியே மறந்தும்விட்டார். பல ஆண்டுகள் கழிந்து ஒரு செய்தி சேகரிப்புக்காக ராணுவத்தினருடன் கன்னியாகுமரி கடலுக்குள் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அவரது தந்தை சென்னையில் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி வந்து சேர்கிறது. அப்பொழுதில் அவருக்கு நாவலுக்கான கரு உண்டாகிவிட்டது.

2. ஒற்றன் - அசோகமித்திரன்
 நவீன தமிழலக்கியத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பலரும்கூட எப்படியோ தவறவிட்ட, தமிழ் எழுத்துலகின் ஆகச்சிறந்த சாதனைகளில் ஒன்று ஒற்றன் என்கிறார். பா.ரா.வின் வார்த்தைகளிலேயே சொல்வதானால், “கதை என்றோ, கதா நாயகன் என்றோ எதுவும் இதில் கிடையாது. வேறு வேறு மனிதர்களுக்கு ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் ஏற்படும் சில அனுபவங்களின் தொகுப்பு எனலாமா? அதுகூடச் சிரமம்தான். மழை மிச்சம்விட்டுச் சென்ற புவியின் ஈரத்தை மொட்டை மாடியிலிருந்து பார்ப்பது மாதிரி... ம்ஹூம். தேங்கிக்கிடக்கும் நீர்த்திட்டுகளில், கடந்துபோகும் மனிதர்களின் பிம்பம் தெரிவது மாதிரி... வேண்டாம்.

3. ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி
  இந்திரா பார்த்தசாரதியைப் பற்றிச் சிலமுறை கேள்விப்பட்டிருந்தும் அவரது எழுத்தை இன்னும் வாசிக்கவில்லை. ஐரோப்பிய நாடொன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்காக அவர் தங்கியிருந்த நாட்களில் அங்கு மக்கள் புரட்சி ஏற்படுகிறது. ஐந்தாண்டுகள் அதை நேரில் கண்டவர் என்ற முறையில் அவ்வாழ்க்கையை அச்சு அசலாக எடுத்து செய்யப்பட்ட நாவல் இது. தமிழில் எழுதப்பட்ட ஆங்கில நாவல் என இதைச் சிலர் சொல்வார்களாம். ஞானபீடம் தவிர இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் அத்தனை உயர் விருதுகளையும் வாங்கியர் இந்திரா பார்த்தசாரதி!

4. நூறு வருடத் தனிமை (one hundred years of solitude)-காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்(Gabriel García Márquez)
  தென் அமெரிக்க நாடொன்றின் துயர வரலாற்றைச் சொல்லும் நாவல் இது. இதுவரை இப்படி ஒரு நாவல் எழுதப்பட்டதில்லை என்கிறார்கள். இந்தவார ஆனந்த விகடனில் கூட எஸ்.ரா. இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நாவல் எழுதுவதையே தன் வாழ்க்கை லட்சியமாக உணர்ந்து வெளி நாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய பின் எங்கிருந்து ஆரம்பிப்பது எந்தவிதமான மொழியைப் பயன்படுத்துவது என்பது எதுவும் பிடிபடாமலேயே பல ஆண்டுகள் செல்கின்றன. குடும்பத்தோடு சுற்றுலாவுக்குச் செல்ல கிளம்பி கார் ஓட்டிக்கொண்டிருக்கையில் அவருக்கு பிடிபட்டுவிடுகிறது. உடனே பயணத்தை ரத்து செய்து வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து சில ஆண்டுகள் எழுதுகிறார். அக்காலம் முழுவதும் அவரது மனைவி சிறுசிறு வேலைகளுக்குச் சென்று குடும்பத்தை நகர்த்துகிறார். நோபல் பரிசு பெற்ற படைப்பு இது!

5. குட்டியாப்பா - நாகூர் ரூமி
  'Reader in English, writer in Tamil' என்று தன்னையே நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்திக்கொள்ளும் நாகூர் ரூமியின் நாவல். வேலூர் பக்கத்தில் இஸ்லாமியக் குடும்பத்தில் நடக்கும் கதை. நகைச்சுவை உணர்வு ததும்பி வழிந்த தனது சொந்த சித்தப்பாவின் கதையைத்தான் எழுதியிருக்கிறார்.

6. புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய்
  எழுத்தில் உச்சங்களைக் கண்ட டால்ஸ்டாயின் மிகப்பரிதாபமாக் தோல்வி அடைந்த படைப்பு. அன்றைய ரஷ்யாவில் பெரும்பான்மை கிருத்தவர்களின் சடங்குகளில் கலந்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்த சிறு கிருத்தவ்க் குழுக்கள் ஒதுக்கப்பட கிராமங்களில் விவசாயக் கூலிகளாக ஒதுங்கிப் போனபின்னரும் விடாமல் அரசாங்கம் அவர்களை நாட்டைவிட்டு விரட்டுகிறது. அவர்களை பத்திரமாக கப்பலேற்றவும் சென்று சேரும் நாட்டில் ஓரளவு பிரச்சனைகளின்றி வாழ வகை செய்யவும் பொருள் திரட்டுவதற்காக எழுத ஆரம்பித்ததுதான் புத்துயிர்ப்பு’. என்னவொரு பின்னணி!

7. காதுகள் - எம்.வீ.வெங்கட்ராம்
  காதில் யாரோ பேசுவது போலவே எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு நோய் எழுத்தாளர் எம்.வீ.வெங்கட்ராமுக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்நோயிலிருந்து விடுபட்ட பின்னர் அப்போது தனக்கேற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் எழுதியுள்ள நாவல். வேள்வித்தீ, நித்தியகன்னி ஆகியவை எம்.வீ.வெங்கட்ராமின் புகழ்பெற்ற படைப்புகள். ஆனால் வெளியே தெரியாத அவரது அற்புதப் படைப்புகள் பல உண்டு எனவும் அவற்றை இப்போது எங்கேயாவது பார்க்க முடியுமா என்பதே சந்தேகம் எனவும் பகிர்கிறார்.

8. நுண்வெளிக் கிரணங்கள் - சு.வேணுகோபால்
  ஒரு சிறுகதை வெளியான நம்பிக்கையில் சென்னைக்கு வந்து, பிழைக்க வழியில்லாமல் விகடனில் அடைக்கலம் கிடைத்து, படைப்பாளியாக இருந்திருக்க வேண்டிய வேணுகோபால் பத்திரிக்கையாளராக மாட்டிக்கொள்கிறார். பண்டைய கர்நாடகத்திலிருந்து பங்காளிச் சண்டைகளால் விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்தில் வந்து வாழ்ந்த தனது மூதாதையரைப் பற்றிய நாவல். எழுத்துப் பிழைகள் பல இருப்பினும் வட்டார வழக்கில் கதையோட்டமும் அதன் வீச்சும் அப்படியே நம்மை சுவீகரித்துக்கொள்வதாகச் சொல்கிறார் பா.ரா. பின்னர் வேணுகோபால் தனது லட்சியப் படைப்பைக் கண்டுகொண்டுவிட்டதாகச் சொல்லி தனது வேலையை உதறி ஊருக்குச் சென்று, இரண்டு-மூன்றாண்டுகளில் சுமார் 5000 பக்கங்கள் கொண்ட தனது அடுத்த நாவலை எழுதி முடித்துள்ளார்!

9. மகாநதி - பிரபஞ்சன்
  மகாநதி நாவலை விட பிரபஞ்சனை பற்றி அதிகம் சொல்கிறார் பா.ரா. சிறுவயதில் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர், தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதினால் அதில் ஓர் அத்தியாயம் ஆக்கூடியவர் என்றேல்லாம் சொல்லும் பா.ரா. முக்கியமானதாக எல்லோரும் தங்களுக்கு நெருக்கமாக உணரக்கூடிய பொழுதுபோக்கல்லாத படைப்புகளை வழங்கியவர் என்று சொல்கிறார். தனது குடும்பத்தின் செல்வ வீழ்ச்சியை சுதந்திரப் போராட்டப் பிண்ணனியில் விவரிப்பதே மகாநதி.

10. மிட்நைட் சில்ட்ரன் - சல்மான் ருஷ்டி
  இதைப் பற்றி பெயரளவிலாவது நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நள்ளிரவில் பிறக்கும் குழந்தைகள் இரண்டு மருத்துவமனையில் இடம் மாறிப் போய்விடுகின்றன!. இந்துக் குழந்தை முஸ்லீம் குடும்பத்திடமும் இந்துக் குழந்தை முஸ்லீம் குடும்பத்திடம் தவறுதலாகக் கொடுக்கப்பட்டுவிடுகின்றன. அதிலிருந்து துவங்குகிறது நாவல். இந்திய அரசியலைப் பேசும் நாவல். தன் சுயவாழ்வில் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி கற்கப்போன நேரத்தில் அவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட திரும்பி எங்கே செல்வது என்ற குழப்பத்தில் ஆரம்பித்த சுய அடையாளத்தைத் தேடும் நாவல். தான் எந்தக் கலாச்சாரத்தை பண்பாட்டை தன்னுடையது என சொல்லிக்கொள்வது
என்ற சிக்கலைப் பேசுவது. புக்கர் பரிசு பெற்றுத்தந்த நாவல்.

11. இரு நண்பர்களின் கதை - வெங்கடேஷ்
  பா.ரா.வோடு கன்னியாகுமரியில் நாவல் முயற்சி செய்த அதே நண்பர். தங்களது வாழ்க்கையையே பின்புலமாகக் கொண்டு ”‘இரு நண்பர்கள்’-இன் கதை”-யை எழுதியிருக்கிறார். ஆரம்பித்த கதையையே தொடர்ந்து எழுதி முடித்திருக்கிறார். இரண்டு கனவுகளின் கதை. ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர் போல் கவனித்து மனோதத்துவ நிபுணரைப் போல கருத்துகளை முன்வைக்கும் பாசாங்கற்ற அழகேற்றம் செய்யப்படாத எழுத்து வெங்கடேஷினுடையது என்கிறார்.

12. அனுராகத்தின் தினங்கள் - வைக்கம் முகம்மது பஷீர்
  பஷீரின் சில சிறுகதைகளையாவது நாம் படித்திருப்போம். அவரது படைப்புகளில் சிறந்ததென பா.ரா. இதைச் சொல்கிறார். மலையாளத்தில் எழுதப்பட்ட காதல் கதை. அது அவரது சொந்த அனுபத்திலிருந்து பிறந்ததாம்!

13. கடலும் கிழவனும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே
   வாழ்க்கையில் விரக்தியின் எல்லைக்கு பலமுறை சென்ற ஹெமிங்வே அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள ஒரு மூர்க்கமான சாகசக்காரராக தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறார். அப்படி ஒரு சாகசப் பயணத்தில் ஒரு ஏழை மீனவக்கிழவனுடம் ஏறத்தாழ ஒருவருடம் பயணிக்கிறார். அந்த அனுபவத்தில் எழுதப்பட்ட நோபல் பரிசு பெற்ற சிறு புத்தகம்தான் கடலும் கிழவனும்.  நோபல் பரிசை வாங்குவதற்குக் கூட அவர் செல்லவில்லை!

14. சாங்சுவரி (sanctuary) - வில்லியம் பாக்னர் (william faulkner)
  இந்தப் படைப்புக்கு கிடைத்த நோபல் பரிசுதான் ஹெமிங்வேயை கடலும் கிழவனும் எழுதத்தூண்டியதாம். போட்டியாளராக இருந்த பாக்னர் பண்டிதத் தன்மையான மொழி நடையில் எழுதியதாலேயே பலரது ஆதரவையும் ஹெமிங்வே போன்றோரின் கிண்டலையும் பெற்றிருக்கிறார். உலகிலேயே மிக அதிகமாக வசைபாடப்பட்ட படைப்பு இதுதானாம். ஆனால் அதற்குக் காரணம் சுடும் உண்மைகளான மனிதனின் குரூரங்களை அப்பட்டமாகப் பேசியதால்!

15. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
  பெரும்பாலும் கேள்விப்பட்டிராத படைப்புகளின் அறிமுக்ம கிடைத்துக்கொண்டிருந்த இப்புத்தகத்தில் நன்கு பரிட்சையமான ஜெயமோகனின்,  கேள்விப்பட்டிருக்கிற நான் படிக்கத்தொடங்கி பாதியில் விட்டுவைத்திருக்கிற ஒரு படைப்பும் இருந்தது ஒரு இனிய அதிர்ச்சி! தன்னளவில் முழுமையான படைப்பான, வெளிவந்த போது கடும் விமர்சனத்துக்குண்டான, இலக்கிய உலகில் பரபரப்பைக் கிளப்பிய விஷ்ணுபுரத்தின் மீது வைக்கப்பட்ட சாடல்கள் அது இன்னும் அதிகம் பேருக்குப் போய்ச்சேர்ந்து புகழ்பெறவே உதவியது என்கிறார். கற்பனையான ஒரு நகரை நிர்மானம் செய்து, காலத்தில் முன்னும் பின்னும் அலைந்து, தத்துவ விசாரங்கள் செய்கின்ற விஷ்ணுப்ரம் ஒரு சாதாரண படைப்பன்று! அது ஒரு காவியமேதான் என்கிறார்.

16. ஜனகணமன - மாலன்
 தேசப்பற்று, விடுதலையுணர்வு, தனிமனித ஒழுக்கம் என்று பலவகைகளிலும் ஒரே மாதிரியான ஆளுமைகளாக இருக்கும் காந்தியையும் கோட்சேவையும் ஆராயும் நாவல். உண்மைச் சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. காந்தி மீதான நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் கொண்ட ஒரு விவாதத்தால் தூண்டப்பட்டு படிக்கத் தொடங்கிய மாலன் இந்நாவலில் எந்த முன் தீர்வுகளும் இன்றி காந்தியை ஆராய்ந்திருப்பதாகச் சொல்கிறார் பா.ரா.

17. இவான் டெனிஸோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் (One day in the life of Ivan Denisovich)-அலெக்ஸாண்டர் சோல்செனிட்ஸன்
  ஹிட்லரது சித்திரவதைச் சாலைகளைப் போலவே ரஷ்யாவில் கம்யூனிசத்திற்கு எதிரனாவர்களின் அல்லது கம்யூனிச அரசுக்கு பிடிக்காதவர்ளுக்கென சித்திரவதைச் சாலைகள் அதே அளவு கொடூரத்துடன் இருந்தனவாம். அத்தகைய சித்திரவதைச் சாலைகள் ஒன்றில் சிக்கிய அப்பாவியான சோல்செனிட்ஸன் தனது அனுபவத்திலிருந்து

18. வாடாமல்லி - சு.சமுத்திரம்
  அரசாங்க அதிகாரியாக இருந்துகொண்டு எழுத்த்துப் பணியை செய்தவர் சு.சமுத்திரம். தமிழில் மூன்றாம் பாலினரின் வாழ்க்கையைப் பேசிய முதல் படைப்பு! டெல்லியில் இந்திராகாந்தி இறந்தபோது கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியர்கள் மூன்றாம் பாலினர் மட்ட்ம்தான். அதை நேரில் பார்த்து ஆச்சர்யம் அடைந்த சமுத்திரம் அதன் பின்னர்தான் அவர்கள்மீது அருவருப்பற்ற பார்வையப் பெற்றிருக்கிறார். அவர்களது வாழ்க்கையை ஆராய்ந்து அதில் உள்ள இன்னல்களைக் கண்டு துணுக்குற்றவர் அதை பலரும் அறியச் செய்ய வேண்டும் என விரும்பியிருக்கிறார். அதனாலேயே நாவலாக எழுதத் தொடங்கியதை சமரசங்கள் செய்துகொண்டு தொடர்கதையாக ஒரு பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்!

3 comments:

Muthu Thex said...

படிப்பதுவும் இலக்கியம் சார்ந்த பணியே :). அதை செவ்வென செய்ய தூண்டுவது நீர் காட்டும் அன்பு. தூண்டியமைக்கு நன்றி.

சாணக்கியன் said...

முத்து, வருகைக்கும் கருத்துக்கு நன்றி :)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆஹா!! அருமையான தொகுப்பு.